உலக மெய்வல்லுநர் போட்டியில் சம்பியன்; 4-வது முறையாக உலக பட்டத்தை வென்ற பிரைஸ்

உலக மெய்வல்லுநர் போட்டியின் 100 மீற்றர் ஓட்ட பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி அன்பிரேசர் பிரைஸ் 4-வது முறையாக உலக பட்டத்தை வென்றுள்ளார்.

17-வது உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டி கட்டார் தலைநகர் டோகாவில் நடைபெற்று வருகிறது.

நேற்றுமுன்தினம் நடந்த ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கோல்மென் தங்கப்பதக்கம் பெற்றார். அவர் பந்தய தூரத்தை 9.76 வினாடியில் கடந்து உலகின் அதிவேக வீரராக திகழ்ந்தார்.

பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டம் நள்ளிரவு 1.50 மணிக்கு நடந்தது.

இதில் ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி- அன்பிரேசர் பிரைஸ் தங்கம் வென்று முத்திரை பதித்தார். 33 வயதான அவர் பந்தய தூரத்தை 10.71 வினாடியில் கடந்து அதிவேக வீராங்கனையாக திகழ்ந்தார்.

பிரேசர் பிரைஸ் 4-வது முறையாக 100 மீற்றர் ஓட்டத்தில் உலக பட்டத்தை வென்றார். 2 முறை ஒலிம்பிக் சம்பியன் ஆவார். வெற்றி பெற்றதும் அவர் மைதானத்தில் தனது 2 வயது மகன் ஜியானை தூக்கி வைத்து கொஞ்சி மகிழ்ந்தார்.

ஐரோப்பிய சம்பியனான இங்கிலாந்தை சேர்ந்த டினா ஆ‌ஷர் சுமித் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 10.83 வினாடியில் கடந்தார். ஐவேரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த மேரி ஜேர் டாலாவ் 10.90 வினாடியில் கடந்து வெண்கல பதக்கம் பெற்றார்.

400 மீற்றர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணி 7-வது இடத்தை பிடித்தது. முகமது அனாஸ், விஸ்மயா, ஜிஸ்னா மேத்யூ, நோவா ஆகியோர் கொண்ட இந்திய அணி 3 நிமிடம் 15.77 வினாடியில் கடந்து 7-வது இடத்தை பிடித்தது.

இந்த பருவகாலத்தில் இந்தியாவின் சிறந்த நிலையாகும். இறுதிப் போட்டிக்கு நுழைந்ததன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்று இருந்தது.

அமெரிக்க அணி 3 நிமிடம் 9.34 வினாடியில் கடந்து உலக சாதனையோடு தங்கம் வென்றது. ஜமைக்கா 3 நிமிடம் 11.78 வினாடியில் கடந்து வெள்ளியும், பக்ரைன் 3 நிமிடம் 11.82 வினாடியில் கடந்து வெண்கலமும் பெற்றன. ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் டெய்லர் 17.92 மீற்றர் தூரம் தாண்டி தங்கம் வென்றார். பெண்களுக்கான 20 கிலோமீற்றர் நடை பந்தயத்தில் சீன வீராங்கனைகள் தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்கள். 3-வது நாள் போட்டி முடிவில் அமெரிக்கா 4 தங்கம், 4 வெள்ளி ஆக மொத்தம் 8 பதக்கம் பெற்று முதல் இடத்தில் உள்ளது. சீனா 2 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கத்துடன் 2-வது இடத்திலும், ஜமைக்கா 2 தங்கம் உட்பட 3 பதக்கம் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளன.

Wed, 10/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை