26 அங்குல வாக்குச்சீட்டு

வாக்குப் பெட்டிகள் மீள் தயாரிப்பு;  வெளிநாட்டிலிருந்தும் இறக்குமதி

நடுநிலை தவறக் கூடாதென  ஊடகங்களுக்கு எச்சரிக்ைக

18ஆம் திகதியே உத்தியோகபூர்வ

முடிவு வெளியாகும் சாத்தியம்

நோயாளர்கள், ைகதிகள், நாட்டாமையினர்

முன்கூட்டியே வாக்களிக்க யோசனை

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செய்திகளைப் பிரசுரிப்பதிலும் வெளியிடுவதிலும் நடுநிலையைப் பேணுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு நேற்று (08) கடுமையான உத்தரவைப் பிறப்பித்தார்.

பக்கச்சார்பான செய்திகள் வெளியிடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட அவர், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்படுமென்றும் எச்சரித்தார்.

கொழும்பு இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு தலைமையகத்தில் நேற்று பத்திரிகை ஆசிரியர்களையும் இலத்திரனியல் ஊடகங்களின்

முக்கியஸ்தர்களையும் சந்தித்த அவர், ஜனாதிபதி தேர்தல்கள் தொடர்பாக ஊடகங்களின் முக்கிய பொறுப்புகள் குறித்து விளக்கமளித்தார்.

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கு முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு வேலைப்பளுவும் செலவினமும் ஏற்படுவதாக சுட்டிக்காட்டினார்.

விசேடமாக, வாக்குச் சீட்டு பற்றிக் குறிப்பிட்ட அவர், வழமைக்கு மாறாக இம்முறை 26 அங்குலம் நீளமுள்ள வாக்குச்சீட்டை அச்சிட வேண்டியுள்ளதாகவும் அதனை அச்சடிப்பதற்காக அரச அச்சகத் திணைக்களத்திற்குப் பொறுப்பளிக்கப்படுள்ளதாகவும் கூறினார்.

இம்முறை கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிடுவதனால், வாக்களிப்பு நிலையங்களுக்கு நியமிக்கப்படும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளது என்றும் வாக்குச் சீட்டின் அளவுக்கு ஏற்ப வாக்குப் பெட்டிகளையும் மீள வடிவமைக்க வேண்டியிருப்பதாகவும் தேவைப்படின் வெளிநாடுகளிலிருந்து பிளாஸ்ரிக் பெட்டிகளைத் தருவிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வழமையைப் போலல்லாது வாக்களிப்பு நிலையங்களை இடவசதியைக் கொண்டதாகவும் அமைக்க வேண்டும். அதேபோன்று வாக்குகளை எண்ணும் நிலையங்களும் அவ்வாறு வசதி கொண்டவையாக இருக்க வேண்டும்.

வாக்குப் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், வாக்களிப்பு நிலைய செயலணிகள் உப செயலணிகள் போன்றவற்றை அதிகரிக்கும் தேவையும் ஏற்பட்டுள்ளது.

வாக்குகள் எண்ணும் பணி தாமதமாகும் என்பதால், செயலணிகளுக்கான நலன்புரி விடயங்கள், போக்குவரத்து வசதிககள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மின்சாரம், நீர், தொலைபேசி போன்ற பொது வசதிகளுக்கான செலவும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு மதிப்பிடப்பட்டதைவிடவும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது என்றும் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். எனினும், செலவுத் தொகையை 500 கோடி ரூபாய்க்கு மட்டுப்படுத்துவதற்குத் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் பெறுபேறு எதிர்பார்ப்பதைவிடத் தாமதமாகும் என்று குறிப்பிட்ட ஆணைக்குழுவின் தலைவர், சிலவேளை, நவம்பர் 18ஆம் திகதி காலையிலேயே இறுதி முடிவை எதிர்பார்க்க முடியும். கடந்த தேர்தலில் மறுநாள் நண்பகலிலேயே புதிய ஜனாதிபதியை அழைக்கக்கூடியதாகவிருந்தது.

ஆனால், இம்முறை அது சாத்தியமாகாது என்றார்.

அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடுவதன் காரணத்தால், இம்முறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலானது 1970களின் தேர்தல் நடைமுறைக்குப் பின்னோக்கிச் சென்றிருப்பதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இது இவ்விதமிருக்க, ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளர்கள், சிறைகளிலிருக்கும் கைதிகள், கூலித்தொழிலாளர்களான நாட்டாமைகள் ஆகியோர் வாக்குகளை முன்கூட்டியே பதிவுசெய்யும் வகையில், யோசனை முன்வைக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

அரசாங்க உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உட்படப் பல்வேறு உயர் மட்டங்களில் உள்ளவர்கள் தபால் மூலம் வாக்களித்து வருகின்றனர். அதுபோல், மேற்குறிப்பிடப்பட்ட நோயாளர்கள், கைதிகள், நாட்டாமைகள் ஆகியோர் வாக்களிக்கவும் ஏற்பாடுகளைச் செய்ய உத்தேசித்திருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் கூறி னார். (ரு,வி)

 

நமது நிருபர்

Wed, 10/09/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக