1st T20; SLvPAK: 2013 பின் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை

RSM
1st T20; SLvPAK: 2013 பின் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை-1st T20 SLvPAK-Danushka Gunathilaka

பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று (05) லாஹூரில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

தனுஷ்க குணதிலக்கவின் அரைச் சதம் மற்றும் இலங்கை வீரர்களின் அபார பந்துவீச்சு என்பவற்றின் உதவியுடன் இலங்கை அணி, வெற்றியீட்டியது.

லாஹூரில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ததையடுத்து, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில், தனுஷ்க குணதிலக்க 57 ஓட்டங்களையும், அவிஷ்க பெனாண்டோ 33 ஓட்டங்களையும் பானுக ராஜபக்ஷ 32 ஓட்டங்களையும், அணியின் தலைவர் தசுன் ஷானக்க 17 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் ஹசனைன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு 166 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, இலங்கை அணியின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறியது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் குறைந்தளவிலான ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், ஒருகட்டத்தில் 4.2 ஓவர் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 22 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட் மற்றும் இப்திகார் அஹமட் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கிய போதும், பின்னர் வந்த வீரர்கள் அணிக்கு ஏமாற்றத்தை வழங்கினர்.

பாகிஸ்தான் அணி சார்பில் இப்திகார் அஹமட் 25 ஓட்டங்களையும், அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் இசுரு உதான மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதன் அடிப்படையில் இலங்கை அணி அதிகூடிய ஓட்டங்களான 64 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணியை வெற்றி கொண்டது.

இலங்கை அணி, 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியை ரி20 கிரிக்கெட் போட்டியொன்றில் தோற்கடித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்ற முதலாவது ரி20 போட்டியில் வெற்றி பெறுவதற்கு இலங்கை அணியில் உள்ள இளம் வீரர்களின் முன் ஆயத்தமும், தன்னம்பிக்கையும் தான் கைகொடுத்திருந்தது என இலங்கை ரி20 அணியின் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கை அணிக்காக முதல் முறையாக தலைவராகச் செயற்பட்டு பெற்றுக் கொண்ட இந்த வெற்றி குறித்து இலங்கை ரி20 அணியின் தலைவர் தசுன் ஷானக்க, போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், ரி20 போட்டியொன்றில் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய முதல் நாடாகவும், சொந்த மண்ணில் ரி20 போட்டியொன்றில் அந்த அணி பெற்றுக் கொண்ட குறைந்தபட்ச ஓட்டங்களாகவும் இது பதிவாகியது. 

இலங்கை 165/6 (20.0)
தனுஷ்க குணதிலக்க 57 (38)
அவிஷ்க பெனாண்டோ 33 (34)
பானுக ராஜபக்ஷ 32 (22)
தசுன் ஷானக்க 17 (10)

மொஹமட் ஹசனைன் 3/37 (4.0)
ஷாதாப் கான் 1/35 (4.0)

பாகிஸ்தான் 101/10 (17.4)
இப்திகார் அஹமட் 25 (30)
சர்பராஸ் அஹமட் 24 (24)

இசுரு உதான 3/11 (2.4)
புலன் பிரதீப் 3/21 (3.0)

ஆட்டநாயகன்: தனுஷ்க குணதிலக்க

Sun, 10/06/2019 - 09:39


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக