18 கட்சிகள்; 17 சுயேச்சைகள் 35 வேட்பாளர்கள் களத்தில்

கட்டுப்பணம் செலுத்திய 41 பேரில் 6 பேர் ஒதுங்கினர்

இரு ஆட்சேபனைகள் நிராகரிப்பு

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் ​போட்டியிடுகின்றனர்.

இவர்களின் வேட்பு மனுக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு நேற்றுக் காலை 9 மணிக்கு ஆரம்பமானது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதும் 35 பேர் மாத்திரமே வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆறுபேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவில்லை. இரு வேட்பாளர்கள் தொடர்பில் இரண்டு ஆட்சேபனை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதும் அவை வேட்பு மனுக்களை நிராகரிப்பதற்கு ஏற்புடையதாக அமையவில்லை என அறிவித்த தேர்தல்கள் ஆணைக்குழு அந்த ஆட்சேபனை மனுக்களை நிராகரித்தது.

ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு காலை 9.00மணி முதல் 11.00மணிw வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரதான கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள்

என்பவற்றன் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்றுக் காலை தேர்தல் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தனர். வேட்பு மனு ஏற்கப்படுவதையொட்டி விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய அடங்கலான குழு உறுப்பினர்கள் முன்னிலையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆட்சேபனைகளை முன்வைக்க 11.00மணி முதல் 11.30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதன்போது இரு ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டன. ஆட்சேபனை நேரம் நிறைவடைந்த பின்னர் வேட்பு மனு தொடர்பில் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இரு ஆட்சேபனைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று அறிவித்த அவர் தாக்கல் செய்யப்பட்ட 35 வேட்பு மனுக்களையும் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களில் 18 பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் வேறு கட்சிகள் (அங்கீகரிக்கப்படாத கட்சிகள்) சார்பில் இரண்டும், சுயேச்சைகள் 15 உம் அடங்குகின்றன.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மிகக் கூடுதலான வேட்பாளர்கள் களமிறங்கி இருப்பதால் பணிகளும் சிரமமானவையாக இருக்கும் எனவும், மேலதிக ஊழியர்கள் பெருமளவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் ஆணைக்குழுத் தலைவர் தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.

வேட்பாளர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கிய அவர் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் சார்பிலும் சுயேச்சைக் குழுக்கள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னங்களையும் வழங்கி வைத்தார்.

ஜனாதிபதித் தேர்தல் பலமுனைப் போட்டியாகக் காணப்படுகின்ற போதும் இரண்டு கட்சிகளுக்கிடையே தான் பலத்த போட்டி நிலவும் நிலையே வெளிப்படையாகக் காண முடிகின்றது.

ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாசவுக்கும் பொதுஜன பெரமுன சார்பில் களமிறங்கியுள்ள கோத்தாபய ராஜபக்ஷவுக்கு மிடையிலேயே கடும்போட்டி நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர ஜே.வி.பி சார்பில் அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்க, முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மற்றும் முன்னாள் அமைச்சர்கள்,எம்.பிகள் ஆகியோரும் தேர்தலில் குதித்துள்ளனர்.

நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு 2018ம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு அமைய ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 பேர் (1,59,92,096 ) தகுதி பெற்றுள்ளனர்.

12,845 வாக்களிப்பு நிலையங்கள் நாடு பூராவும் அமைக்கப்படும். சாதாரணமாக ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு ஒருவாக்களிப்பு நிலையம் என்ற ரீதியிலேயே கணக்கிடப்பட்டுள்ளது.

எனினும் வாக்காளர் எண்ணிக்கை மிகக் கூடுதலான பகுதிகளில் இரண்டு வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

35 வேட்பாளர்கள்

போட்டி

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்த 35 பேர்களின் வேட்பு மனுக்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

போட்டியிடாத

6 வேட்பாளர்கள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியவர்களில் ஆறுபேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதிலிருந்து தவிர்த்து கொண்டுள்ளனர்.

நேற்றுக்காலை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் முடியும் வரை இந்த ஆறு பேரில் ஒருவர் நிகழ்வில் பங்கேற்ற போதிலும் வேட்புமனுவைத் தாக்கல் செய்யவில்லை.

ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையிலேயே ஆறுபேர் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

சமல் ராஜபக்ஷ, பஷீர் சேகுதாவூத், ஜயந்த லியனகே, குமார வெல்கம, திஸ்ஸகுட்டி ஆரச்சி, மஹிபால ஹேரத் ஆகியோரே வேட்புமனு தாக்கல் செய்யாதோர் ஆவர்.

இவர்கள் ஆறுபேரும் சுயேச்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை 8ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்காக கடந்த செப்டம்பர் 18 ஆம் திகதி அறிவிப்பு வெளியிட்டப்பட்டது.

கட்டுப்பணம் செலுத்துவதற்கு செப்டம்பர் 18 முதல் அவகாசம் வழங்கப்பட்டதோடு வேட்புமனு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது

சனி, ஞாயிறு தினங்கள் தவிர்ந்த வார நாட்களில் காலை 9. மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுப்பணம் செலுத்தக் கூடியதாக இருந்தது.

ஒக்டோபர் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை, இன்று முதல் பிரதான கட்சிகள் பிரசார பணி களை ஆரம்பிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

எம். ஏ. எம். நிலாம்

Tue, 10/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை