Header Ads

நவம்பரர் 16 இல் புது யுகம் படைப்போம்!

மக்களின் பேராதரவுடன் நவம்பர் 16ல் புதுயுகம் படைக்கும் பணியை ஆரம்பித்து, மக்கள் தலைவனாகவும் மக்கள் தொண்டனாகவும் அரசியல் வாழ்க்கையை அர்ப்பணிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாசா தெரிவித்தார்.

கொழும்பு காலிமுகத்திடலில் நிரம்பிவழிந்த மக்கள் கூட்டத்தினரின் மத்தியில் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.   ஐக்கிய தேசிய முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று மாலை காலிமுகத்திடலில் இடம்பெற்றது.  

வரலாறு காணாத மக்கள் வெள்ளம் திரண்டிருந்த இக்கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.இங்கு உரையாற்றிய அவர் கூறியதாவது, 

இந்த ஜனாதிபதி தேர்தல் எனக்கு ஒரு சவாலாகவே தெரியவில்லை. இங்குள்ள மக்கள் வெள்ளத்தைப் பார்க்கும்போது நிச்சயமாக நவம்பர் 17ஆம் திகதி விடியும் போது, நானே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவேன். தேசத்தையும் மக்களையும் இதயத்தில் தாங்கி,தேசத்தை பாதுகாத்து, மக்கள் சுபீட்சத்துக்காகவே என்னை முழுமையாக அர்ப்பணிப்பேன்.கடந்த கால ஆட்சியில் நடந்தவற்றை மக்கள் இன்னமும் மறக்கவில்லை. இதையே இச்சனத்திரள் வெளிப்படுத்துகிறது.

எனது வாழ்க்கையில் தவறுகள் நடந்ததாகத் தெரியாது. அப்படியேதாவது நடந்திருந்தாலும் சம்பந்தப்பட்டவரை  தேடிச்சென்று அவரது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பேன். எதிர்த்தரப்பினர் என்மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களை இந்த நாட்டு மக்கள் நம்பத் தயாராகவில்லை.தாய் நாட்டை கட்டியெழுப்ப எனது தந்தை வழியில் பயணத்தை ஆரம்பித்திருக்கின்றேன்.  

இந்த நாட்டுக்கு குடும்ப ஆட்சியா? மிலிட்டரி அதிகாரியா?அடிப்படைவாத தலைவனா? தேவை என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

மீண்டுமொருதடவை சர்வாதிகாரத்தின் பக்கம் நாட்டை கொண்டுசெல்ல இடமளிக்க முடியாது. வரலாற்று பெருமைமிக்க ஜனாதிபதியாக நிச்சயமாக நான் தெரிவாவேன். உலகை வெல்ல வேண்டுமென்பதே  அபிலாஷையாகும். இலங்கை உலகிலே அதிசிறந்த நாடாக புகழப்படவேண்டும். அதற்காக நாங்கள் எல்லோரும் இன, மத, மொழி பேதம் கடந்து ஒன்றுபட வேண்டும். ஒரு தனிமனிதனுக்காக எதையும் தாரைவார்க்க நாங்கள் தயாராகவில்லை.  பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால்  ஒன்றுபட்ட மக்கள் சக்தி மிக முக்கியமானது. உலக சந்தையை எமது கைகளுக்குள் கொண்டு வரவேண்டும்.  எமது வளங்களை சரியானமுறையில் பயன்படுத்தினால் இந்த உச்ச நிலைக்கு வரமுடியும்.  

இந்த இலட்சியத்தை அடைவதற்கு யார் அதிகாரத்துக்கு வரவேண்டுமென்பதை நீங்கள் எடுக்கவேண்டும். தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். 30வருடகால யுத்தத்தில் எமது தேசத்தை பாதுகாத்த பெருமை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவையே சாரும். அந்த அடிப்படையில் தேசிய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் பொறுப்பை நான் அவரிடமே கையளிப்பேன். யுத்தமென்ற வார்த்தையைவிட போதைப்பொருள் பாவனை, இனக்குரோதங்களை தூண்டிவிடுதல் இவற்றையெல்லாம் தடுக்கவேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கின்றது. தண்டிக்கப்பட வேண்டியவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்.

அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப் படும். நேர்மையாக நடப்பவர்களுக்கும் திறமையுள்ளோ ருக்கும் நிச்சயம் வாய்ப்பளிப்பேன்.

என்னிடமிருந்து குறுகிய இலாபம் தேடும் நோக்கில் யாராவது இருந்தால் அவர்கள் என்னைவிட்டு விலகிச்செல்ல முடியும்.

திறமையான படித்த இளைஞர்களுக்கு உரிய வாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்படும். புதிய சிந்தனையுடன் இளைஞர்களை அணிதிரட்டி இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பு ஒடுக்கப்படும்.

சனத்தொகையில் 51வீதத்தை தாண்டியவர்கள் பெண்களாவர்.பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் பிரதம நீதியரசராகவும் பதவி வகித்த பெருமை எமது நாட்டு பெண்களுக்குரியதாகும். அவர்களுக்கு உரிய இடத்தை நிச்சயம் பெற்றுக்கொடுப்பேன். பெண்களுக்குரிய விசேடமான சாசனம் ஒற்றைத் தயாரித்து உடன்படிக்கை செய்யப்படும். அதேபோன்று விவசாயிகளுக்கும் விவசாய சாசனம் உருவாக்கப்படும். அவர்களுடனும் உடன்படிக்கையொன்றை செய்துகொள்வேன். விவசாயிகளை ஏமாற்றும் பொய் உத்தரவாதங்கள்   வழங்கப்படாது.

வறுமையொழிப்பு, சமுர்த்தி ஊக்குவிப்பு, உழைக்கும் வர்க்கத்திற்கான ஆதரவுகள்  தாராளமாக வழங்கப்படும். வறுமைக் கோட்டிலிருந்து நாட்டை முற்றுமுழுதாக விடுவிப்பதே எனது நோக்கம்.

நானொரு பௌத்தனாக இருக்கலாம். பௌத்தத்துக்கே  முன்னுரிமை. ஆனால், நாட்டை ஆட்சி செய்யும் போது, இனம், மதம், மொழி கடந்து அந்தந்த சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உத்தரவாதங்கள் வழங்கப்படும். எல்லோரையும் அணைத்துக்கொண்டே பயணிக்க விரும்புகின்றேன்.  

கீத் நொயர், லசந்த விக்கிரமதுங்க, எக்னொலிகொட போன்றவர்களுக்கு என்ன நடந்ததென்று நாட்டு மக்கள் நன்கறிவார்கள். ரத்துபஸ்வெலவில் தண்ணீர் கேட்டவர்களுக்கு எதிராக ரி-56 பயன்படுத்தியதை மறக்கமுடியுமா?  ஆனால், 16 ஆம் திகதி நீங்கள் வழங்கும் தீர்ப்பிலே நாட்டின் எதிர்காலம் தங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  

எம்.ஏ.எம். நிலாம் 

Fri, 10/11/2019 - 09:27


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.