குமார் சங்கக்கார 10 ஆண்டுகளின் பின்னர் பாகிஸ்தான் பயணம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்தின் (எம்.சி.சி.) தற்போதைய தலைவருமான குமார் சங்கக்கார பாகிஸ்தான் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது லாகூரில் வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் போது, பஸ்ஸில் பயணித்த வீரர்களில் சங்கக்காரவும் உள்ளடங்குகின்றார். அந்தச் சமயத்தில் சங்காவுக்கு சிறிய காயமும் ஏற்பட்டது.

அதன் பின்னர், இன்றுவரை சங்கக்கார பாகிஸ்தான் சென்றதில்லை. இந்நிலையில், 10 வருடங்களின் பின்னர் அவர் பாகிஸ்தான் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. எம்.சி.சி. கிரிக்கெட் கழகம் பாகிஸ்தான் செல்லவுள்ள நிலையில், சங்காவும் அங்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சங்கா, ‘ஆம், தற்போது ஒரு வாய்ப்பு வந்துள்ளது. பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளோம். அதில் நானும் பங்கேற்பேன்’ எனக்கூறியுள்ளார்.

சங்கா எம்.சி.சி.யின் தலைவராவதற்கு முன்பாக, பாகிஸ்தான் சுற்றுத்தொடர்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போது, அது வீரர்களின் தனிப்பட்ட முடிவு.

அதனை கிரிக்கெட் சபைகள் நிர்ப்பந்திக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

அந்த அடிப்படையில் தான், அண்மைய இலங்கை அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது கூட, 10 முன்னணி வீரர்கள் தங்களது சொந்த விருப்பின் பேரில் அங்கு செல்வதை தவிர்த்துக்கொண்டார்கள்.

2009 ஆம் ஆண்டு லாகூர் தாக்குதலுக்கு பின்பு ஆறு வருடங்கள் பாகிஸ்தானுக்கு சென்று எந்தவொரு சர்வதேச அணியும் விளையாடவில்லை.

பின்னர், சிம்பாவே அணி 2015 ஆம் ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் விளையாட முதல் தடவை பாகிஸ்தான் சென்றிருந்தது.

அதன் பின்னர் 2017 இல் உலகப் பதினொருவர் அணியும், 2018 இல் மேற்கிந்திய தீவுகள் அணியும், அண்மையில் இலங்கை அணியும் அங்கு சென்று விளையாடியது. அதுமட்டுமல்லாது,

கடந்த இரண்டு வருடங்களாக பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் இறுதிப்போட்டியும் பாகிஸ்தானில் இடம்பெற்றது. இதில் பல வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

பாகிஸ்தான் சென்று விளையாடிய இலங்கை அணியினர், அந்நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் திருப்தி வெளியிட்டுள்ள நிலையில் எம்.சி.சி. அணி பாகிஸ்தான் செல்லும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பிலான பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைமை நிறைவேற்று அதிகாரியான வசீம் கானுடன் இடம்பெறுவதாகவும், விரைவில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகள் சென்று விளையாடும் எனவும், பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் சொந்த நாட்டு இரசிகர்கள் முன்பாக பல்வேறு போட்டிகளில் விரைவில் விளையாடுவார்கள் என்றும் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இருந்தான இலங்கைக்கான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பிலும் பாகிஸ்தானில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் வைத்து சங்கா கருத்து வெளியிட்டுள்ளார்.

Thu, 10/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை