கீழ்த்தரமான அரசியல்வாதிகள் யார் என்பதை தில்ருக்ஷி வெளிப்படுத்த வேண்டும்

கீழ்த்தரமான அரசியல்வாதிகள் யார் என்பதை தில்ருக்ஷி வெளிப்படுத்த வேண்டும்-Dilrukshi Dias Must Reveal the Truth About Degraded Minister

தில்ருக்ஸி டயஸின் ஒளிநாடாவில் குறிப்பிட்டுள்ள விதத்தில் தவறான முறையில் வழங்குத் தாக்கல் செய்வதற்கு அவருக்கு ஆலோசனை வழங்கிய கீழ்த்தரமான அரசியல்வாதிகள் யார் என்பதை நாட்டுக்கு வெளிக்கொண்டு வர வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதனை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பது மிகவும் அவசியமான விடயம் என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று (21) நாவுலவில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இலஞ்ச ஊழல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தனக்கு அறிவிக்காமல் இராஜினாமா செய்ததாகவும் முன்னாள் முப்படைத் தளபதிகளை நீதிமன்றத்திற்கு கொண்டுசென்றபோது தான் கூறிய விடயம் ஒன்றிற்காக அவர் பதவி விலகினார் என்றும் தெரிவித்தார்.

தற்போது ஊடகங்களில் வெளியாகியிருக்கும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகத்தின் ஒளி நாடா குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,

காலை முதல் பிற்பகல் 4.00 மணி வரை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் கடமைகளை நிறைவுசெய்து பிற்பகல் 6.00 மணிக்கு பின்னர் அலரிமாளிகையின் இலஞ்ச, ஊழல் செயலகத்தில் கடமைபுரியும் திருமதி. தில்ருக்ஷி டயஸை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு அண்மையில் பிரதமரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, தில்ருக்ஸி டயஸின் ஒளிநாடாவில் குறிப்பிட்டுள்ள விதத்தில் தவறான முறையில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு அவருக்கு ஆலோசனை வழங்கிய கீழ்த்தரமான அரசியல்வாதிகள் யார் என்பதை நாட்டுக்கு வெளிக்கொண்டு வருமாறும் அதனை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பது மிகவும் அவசியமான விடயம் என்றும் தெரிவித்தார்.

அவன் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்திற்கு அனுமதி வழங்கியமையால் அரசாங்கத்திற்கு பல மில்லியன் நஷ்டம் ஏற்பட்டதாக, கோத்தாபய ராஜபக்‌ஷ, நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்‌ஷி டயஸினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோத்தாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்தி அடிப்படை உரிமை மீறல் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதோடு, அவர்களை அவ்வழக்கிலிருந்து விடுவிப்பதற்கும் உத்தரவிட்டிருந்தது.

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க மற்றும் அவன் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலொன்றை கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த வெள்ளிக்கிழமை (20) ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தியிருந்தார்.

அவ்வுரையாடலில் தில்ருக்ஷி டயஸ் பின்வருமாறு பேசியிருந்தார்,

"உங்கள் வர்த்தக நடவடிக்கை இல்லாதொழிந்து விடும் என எண்ணியிருந்தால், எனது வாழ்க்கையில் நான் அந்த வழக்கை தாக்கல் செய்திருக்க மாட்டேன். இந்த மோசமான அரசியலினால் உங்களின் அலுவலகத்திலுள்ள 7500 இற்கும் அதிகக் கடிதங்களை நான் வாசித்துள்ளேன். தனிப்பட்ட ரீதியில் அனைத்து கடிதங்களையும் வாசித்துள்ளேன். அதிகாரிகளுடன் நீங்கள் எப்படி இருந்தீர்கள், குடும்பங்களை எவ்வாறு கவனித்தீர்கள் என நான் அறிவேன். நிஸ்ஸங்க உண்மையில் நான் கவலையடைந்தேன். ஒரு சில அரசியல்வாதிகளே இதற்கு காரணம். கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக நான் வழக்கு தாக்கல் செய்திருக்கமாட்டேன். அந்த முழு செயற்பாடு தொடர்பில் நான் வேதனையுற்றுள்ளேன். எனக்கு சட்டத்தை தயாரிக்கவும் தெரியும், சட்டத்தை மீறவும் தெரியும். " என அவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து குறித்த குரல் பதிவு தொடர்பில், தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது பேஸ்புக் பக்கத்தில் பதில் வழங்கியிருந்தார்.

நிஸ்ஸங்க சேனாதிபதி அவர்களுக்கு,

நான் ஒரு அரச ஊழியர் என்ற வகையில், நீங்கள் பதிவு செய்துள்ள இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பில் பொதுமக்களுக்கு என்னால் தௌிவூட்ட முடியாது. அதனால் கீழுள்ள இரண்டு கேள்விகளுக்கு பதில் வழங்குங்கள்.

1. உங்களுடனான இந்த கலந்துரையாடலை அரசாங்கத்தின் எந்த அமைச்சர் வழங்கியது மற்றும் எதற்காக என்பதை மக்களுக்கு கூறுங்கள்.

2. அந்த தொலைபேசி உரையாடலை நீங்கள் திரிபுபடுத்தியுள்ளதனால், பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் முழு உரையாடலையும் வௌியிடுங்கள்.

என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தில்ருக்‌ஷி டயஸ் தானே அதனை பேசியுள்ளதாக இதிலிருந்து புலனாவதாகவும், தனது உரையாடலை அவர் ஏற்றுக்கொண்டமையை கருத்திற்கொண்டு, அது தொடர்பிலான ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்க பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு நாளைய தினம் (23) சட்ட மா அதிபர் அனுப்பவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பாளர், அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Sun, 09/22/2019 - 13:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை