நஞ்சு கலந்த உணவை உட்கொண்ட கொம்பன் யானை உயிரிழப்பு

நவகத்தேகம மொரகஹவெவ குருந்துவெட்டிய குளத்தில் உடம்பில் நஞ்சு கலந்ததால் உயிரிழந்த கொம்பன் யானையின் ஒரு சோடி கொம்புகளுள் ஒரு கொம்பினை எவரோ வெட்டி எடுத்துச் சென்றிருப்பதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 15 வருட வயதையுடைய இந்த கொம்பன் யானை 7 அடி உயரத்தைக் கொண்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை பகல் மேற்கொள்ளப்பட்ட உயிரிழந்த யானையின் பிரேத பரிசோதனையின் போது குறித்த கொம்பு யானையின் உடம்பில் ஒரு வகை நஞ்சு கலந்ததால் அந்த யானை உயிரிழந்திருப்பதாக வனவிலங்கு திணைக்கள மிருக வைத்தியர் தெரிவித்தார். இந்த யானைக்கு ஏதேனும் பழங்கள் அல்லது வேறு உணவுகளுடன் நஞ்சு கலந்து உட்கொள்ளக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அதன் பின்னர் குறித்த யானை கடும் சுகயீனமுற்று குளத்தினருகில் வந்து அங்கு வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என்றும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த யானை அந்தக் குளத்தில் உயிரிழந்து கிடந்ததை அறிந்தவர்கள் அந்த யானையின் இரண்டு கொம்புகளில் ஒன்றை வெட்டி எடுத்துச் சென்றிருப்பதாகவும், மற்றைய கொம்பு யானையின் உடம்புக்கு கீழால் சிக்கியிருந்ததால் அதனை வெட்டி எடுப்பதற்கு முடியாது போயிருந்ததாகவும் வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

வனவிலங்குத் துறை மிருக வைத்தியவரினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் பின்னர் யானையின் சடலத்தை புதைப்பதற்கு வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

(புத்தளம் விஷேட நிருபர்)

Thu, 09/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை