இஸ்ரேலில் அரசமைக்க நெதன்யாகுவுக்கு அழைப்பு

இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவிடம் ஜனாதிபதி ரியுவன் ரிவ்லின் கேட்டுள்ளார்.

கடந்த வாரம் நடந்த தேர்தலில் எவரும் பெரும்பான்மை பெறாத நிலையில் நெதன்யாகு மற்றும் அவரது பிரதான போட்டியாளரான பென்னி காட்ஸ் இடையே ஐக்கிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது பற்றி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையிலேயே ஜனாதிபதி இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

இந்த ஆண்டில் இஸ்ரேலில் இடம்பெற்ற இரண்டாவது பொதுத் தேர்தல் முடிவுகளும் இழுபறி கொண்டதாக இருந்தது. 120 இடங்கள் கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில் காட்ஸின் நீலம் மற்றும் வெள்ளை கூட்டணி 33 ஆசனங்களையும் நெத்தன்யாகுவின் லிகுட் கட்சி 32 ஆசனங்களையும் வென்றுள்ளது.

இந்நிலையில் புதிய அரசொன்றை அமைப்பதற்கு நெதன்யாகுவுக்கு ஆறு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.

“நெதன்யாகுவுக்கே அரசமைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன” என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். மேலும், தனது முடிவு ஒரு தீர்வு அல்ல என்றும், அரசியல் முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பதில் இரு கட்சி தலைவர்களுக்கும் பொறுப்பு உள்ளது என்றும் கூறினார்.

நெதன்யாகு பேசும்போது, “எனது லிகுட் கட்சியோ அல்லது காட்ஸின் நீலம் மற்றும் வெள்ளை கட்சியோ ஒரு கூட்டணி அமைக்க முடியாது என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் இணைந்து செயல்படுவதுதான் தீர்வுக்கான ஒரே வழி” என்றார்.

இந்த ஆண்டு மூன்றாவது பொதுத் தேர்தலை தவிர்க்க நெதன்யாகுவால் முடியும் என்றும், இதற்காக அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார் என்றும் ஜனாதிபதி ஏற்கனவே கூறியமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் இராணுவத் தளபதி காட்ஸை பிரதமராக்கும்படி இஸ்ரேல்–அரபு கூட்டணி கடந்த திங்கட்கிழமை கோரியது. இந்த தேர்தலில் அரபு கட்சிகளை ஒன்றிணைத்த கூட்டணி மூன்றாவது இடத்தை பெற்றது. நெதன்யாகுவை அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று அந்தக் கூட்டணி குறிப்பிட்டது.

1992 ஆம் ஆண்டுக்கு பின்னர் இஸ்ரேல் பிரதமர் பதவிக்காக அரபுக் கட்சிகள் தமது ஆதரவை வழங்கிய முதல் சந்தர்ப்பமாக இது இருந்தது.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தேர்தலில் கூட்டணி அரசொன்றுக்கான முயற்சி தோல்வி அடைந்த நிலையிலேயே கடந்த வாரம் இஸ்ரேலில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Fri, 09/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை