சரியான நேரத்தில் இராஜதந்திர ரீதியான முடிவினை எடுப்போம்

உரிமையையும் அபிவிருத்தியையும் சமாந்தரமாக முன்னெடுக்கிறோம்

நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் பொறுப்பை மக்கள் எமக்கு தந்துள்ளனர். அந்த பொறுப்பினை நாம் நிதானமாக கையாளுவோம். அதற்கு எம்மிடம் அனுபவமிக்க முதிர்ச்சியான அரசியல் தலைமை உள்ளது. எனவே சரியான நேரத்தில் இராஜதந்திர ரீதியான முடிவினை எடுப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும் மக்களை அநாதரவாக விட்டுவிட்டு உரிமைக்காக

 

போராடுங்கள் என கூற முடியாது. அதனால் தான் நாம் அபிவிருத்தியையும் உரிமையையும் சமாந்தரமாக கொண்டு செல்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.

யாழ்.சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் வகுப்பறைக் கட்டிடத் தொகுதி திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு அங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் உரையாற்றுகையில்,

நாம் அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதை பலரும் பலவிதமாக பேசுகின்றனர். உரிமைக்காக போராடிய நாம் கம்பெரேலியாவில் வந்து நிற்பதாக கூறுகின்றனர். ஆனால் இந்த அபிவிருத்தி திட்டங்களின் முக்கியத்துவம் வீழ்ச்சியடைந்துள்ள எமது சமூகத்தை மீளவும் தலை நிமிர்ந்து வைப்பதற்கான முயற்சியிலே ஈடுபட்டுள்ளோம்.

எமது உரிமைகள் முக்கியமானவை. அவற்றை நாம் எப்பொழுதும் கைவிடப் போவதில்லை. ஆனால் பசியோடு உரிமைக்காக போராடுமாறு மக்களை அழைக்கக் கூடாது. மக்களின் நாளாந்த தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும். அவர்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும். விசேடமாக கல்விச் செயற்பாடுகள் எவ்வித பின்னடிப்புகளும் இல்லாமல் நடைபெற வேண்டும்.

நாம் உரிமைக்கான போராட்டத்தை தொடருவோம். இதனைவிடுத்து மக்களை அநாதரவாக விட்டுவிட்டு உரிமைக்காக போராடுங்கள் என கூற முடியாது. அதனால் தான் நாம் அபிவிருத்தியையும் உரிமையையும் சமாந்தரமாக கொண்டு செல்கின்றோம்.

இதற்காக நாம் எமது உரிமைப் போராட்டத்தை கைவிட்டுவிட்டோம் என்ற பொய்ப் பிரச்ச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது.

நாம் அபிவிருத்தியில் கரிசனை செலுத்துவது எமது உரிமைக்கான போராட்டத்தினை வலுப்படுத்தவே.நாடு தற்போது முக்கியமான திருப்பு முனையிலே வந்து நிற்கிறது. இந் நிலையில் நாம் மக்களை சரியாக வழி நடத்த வேண்டிய தேவையுள்ளது. அரசியல் தலைவர்களாக எமக்கு பொறுப்புக்கள் இருக்கின்றது. நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் பொறுப்பை மக்கள் எமக்கு தந்துள்ளனர். அதனை நாம் பொறுப்புணர்வுடன் நிறைவேற்ற வேண்டிய தேவையுள்ளது.

பொறுப்பில்லாமல் நடக்கின்ற பலர் உள்ளனர். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ளலாம். ஏனென்றால் மக்கள் அவர்களிடத்தில் அந்த பொறுப்பை கொடுக்கவில்லை. மக்கள் அந்த பொறுப்பை கொடுக்காத காரணத்தினால் அவர்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டாலும் எந்தவித பாதிப்புக்களும் இல்லை.

ஆனால் எங்களிடத்தில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் நாம் மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்படுவோம். எனவே மக்களும் பொறுமையாக எம்முடன் பயணிக்க வேண்டும்.

பருத்தித்துறை விசேட, சாவகச்சேரி தினகரன் நிருபர்கள்

Tue, 09/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை