ரணில் - சஜித் நேரடி பேச்சு ஒத்திவைப்பு

 நாளை சந்திக்க முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு தீர்வுகாணும் முகமாக கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்குமிடையில் நேற்று இடம்பெறவிருந்த பேச்சுவார்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாஸ, ஏற்கனவே திட்டமிட்டுள்ள நிகழ்வுகளில் கலந்துகொள்ள சென்றதால் இந்தப் பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டதாக ஐ.தே.க பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அதற்கமைய பேச்சுவார்த்தை நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கு இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற வேண்டுமென கடந்த வெள்ளிக்கிழமை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் நேற்று (08) காலை 9.00மணிக்கு குறித்த பேச்சுவாத்தையை அலரி மாளிகையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பின்புலத்திலேயே திடீரென பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

“எனினும் திட்டமிட்டப்படி நாளை பேச்சுவார்த்தை நடைபெறும். இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்படும்” என சஜித் பிரேமதாஸவின் ஆதரவு தரப்பினர் கருத்து வெளியிட்டனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கு ஐ.தே.மு சார்பில் நிறுத்தும் வேட்பாளர் தொடர்பில் கடந்த சில வாரங்களாக இழுபறி நிலை காணப்படுவதோடு சஜித் ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம்.பிகள் நாடுபூராவும் கூட்டங்கள் நடத்தி வருவது தெரிந்ததே.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 09/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை