கட்டார் உலகக்கிண்ண கால்பந்து தொடர் : உத்தியோகபூர்வ சின்னம் வெளியீடு

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலகக்கிண்ண கால்பந்து தொடர், எதிர்வரும் 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இத்தொடரை நடத்துவதற்கான கால்பந்து விளையாட்டு அரங்குகளின் நிர்மாணப் பணிகளை, கட்டார் அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. எட்டு அரங்குகளுடன் 32 அணிகளுக்கான பயிற்சி அரங்குகளும் அடுத்த வருடத்துக்குள் பூர்த்தி செய்யப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கான தயார்படுத்தல்களை போட்டி அமைப்பாளர்கள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கமைய தற்போது, உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கான உத்தியோகபூர்வ சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உத்தியோக பூர்வ சின்னம் டோஹா டவரில், மின் விளக்குகளால் அமைக்கப்பட்ட லேசர் கதிர்களில் ஒளிரவிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கட்டாரின் முக்கிய நகரங்களில் உள்ள பிரபல கட்டிடங்களின் வெளிப்புறத்திலும் லேசர் கதிர்களால் உத்தியோக பூர்வ சின்னம் காட்சிப்படுத்தப்பட்டது.

22ஆவது அத்தியாயமாக நடைபெறும் கட்டார் கால்பந்து உலகக்கிண்ணம், மத்திய கிழக்கு நாடொன்றில் முதன்முறையாக நடைபெறும் முதல் உலகக்கிண்ண தொடராகும்.

கால்பந்து உலகக் கிண்ண தொடரானது வழக்கமாக மே, ஜூன், ஜூலை மாதங்களில் இல்லாமல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி வரை உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

அத்தோடு இத்தொடரின் மூலம் 32 அணிகள் பங்கேற்கும் கடைசி உலகக் கிண்ணத் தொடரை கட்டார் நடத்த தீர்மானித்துள்ளது. எனினும் இதுகுறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை. அத்துடன் இத்தொடரில் 64 போட்டிகள் நடைபெறவுள்ளன.

Fri, 09/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை