கோட்டாபய உட்பட மூவர் நேற்று கட்டுப்பணம்

தபால்மூல வாக்களிப்பு விண்ணப்ப திகதியில் மாற்றமில்லை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்றைய தினம் பொதுஜன பெரமுனவின் நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ உட்பட மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளார்.

அதேசமயம் ‘அபே ஜனபல’கட்சி சார்பில் வெலிசரகே சமன் சிறியும், சுயேச்சை வேட்பாளராக அபரெக்க புஞ்ஞாசார தேரோவும் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

ஏற்கனவே நேற்று முன்தினம் இலங்கை சோஷலிசக் கட்சி சார்பில் அஜந்தா விஜேசிங்க பெரேராவும், சுயேச்சை வேட்பாளர்களாக கெட்டகொடகமகே ஜயந்த பெரேரா, சிறிபால அமரசிங்க ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தைச் செலுத்துவதற்காக செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி மதியம் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் அலுவலக நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 வரை தேர்தல்கள் செயலக நிதிக்கரும பீடத்தில் செலுத்த முடியும்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தவிர்ந்த சுயேச்சை வேட்பாளர் கட்டுப் பணத்தைச் செலுத்த வரும்போது அவர் சட்டவாக்க சபையின் (பாராளுமன்றம்) உறுப்பினராக இருப்பவர் அல்லது இருந்தவர்களே என்பதை உறுதி செய்யும் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் உறுதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

தபால் மூல வாக்களிப்பு

2019.11.16 ஆம் திகதி நடத்தப்படவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்காக அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு தகைமை பெற்றவர்களின் விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் கால எல்லை 2019 செப்டெம்பர் 30 ஆம் திகதி மதியம் 12.00 மணிக்கு முடிவடையும்.

அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி எக்காரணத்தினாலும் நீடிக்கப்படாதென்பதால், அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கும் தகைமையைக் கொண்ட வாக்காளர்கள் உடனடியாக தனது விண்ணப்பங்களை உரிய முறையில் பூரணப்படுத்தி உரிய அத்தாட்சிப்படுத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் குறித்த விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றவுடன் அவற்றை அத்தாட்சிப்படுத்தி உரிய தேர்தல் மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலருக்கு அனுப்புவதற்கு அனைத்து அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் அறிவித்துள்ளனர்.

எக்காரணத்தினாலும் 2019 செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குப் பின்னர் குறித்த தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு நேரிலோ அல்லது அஞ்சல் ஊடாகவோ கிடைக்கப்பெறும் அஞ்சல் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இல்லையென்பதையும் குறித்த விண்ணப்பங்களை தாமதமாகக் கிடைத்த விண்ணப்பங்களாகக் கருதி நிராகரிக்க வேண்டியேற்படுமென்பதையும் இத்தால் அறிவிக்கின்றேன் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

எம். ஏ. எம். நிலாம்

 

 

Sat, 09/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை