பேச்சை மீள ஆரம்பிக்க பிரதமர் ரணில் உறுதி

இந்திய−இலங்கை மீனவர் விவகாரம்;

இந்திய பாராளுமன்றக் குழுவினரின் கோரிக்ைகக்கு சாதக பதில்

இலங்கைச் சிறையிலுள்ள இந்திய மீனவர்களை காந்தி பிறந்த தினத்தில் விடுவிக்க கோரிக்ைக+

காந்தியடிகளின் 150-ஆவது ஜனன தினத்தன்று இலங்கைச் சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்ைக எடுக்க வேண்டுமென இந்தியப் பாராளுமன்ற குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று (13) நேரில் வலியுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து இந்திய−இலங்கை மீனவப் பிரதிநிதிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்க நடவடிக்ைக எடுப்பதாகப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மூலமாக இந்தியாவில் இருந்து வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர்

 

பேராசிரியர் கே.எம். காதர்மொகீதின், தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி, பாராளுமன்ற உறுப்பினர்கள் இ.டி. பஷீர், கே. நவாஸ்கானி, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட 24 பேர் நேற்று அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பல்வேறு பிரச்சினை குறித்துப் பேசினார்கள்.

பல்வேறு பிரச்சினை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் கூறுகையில், விரைவில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கானி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியதாவது : என் தொகுதியான ராமநாதபுரம் மக்களின் நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையேயான தொடர்பும் நட்பும் தொன்மைமிக்க தாகும்.

இந்திய நிலப்பரப்புடன் இலங்கையும் ஒருங்கிணைந்தே இருந்தது என்பதை புவியியல் அறிஞர்கள் ஆய்வு செய்து தெரிவித்திருப்பதை இங்கு நினைவு கூறுகிறேன்.

பரிணாம வளர்ச்சியின் காலகட்டத்தில் கடல் தான் திடீரென்று உறுமிக் குழம்பி நம் இரு நாடுகளையும் பிரித்துள்ளது. இராமநாதபுரம் தொகுதி மீனவர்கள் அடிக்கடி கடற்பரப்பில் தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர்.

என் தொகுதி மீனவர்களின் இந்த வாழ்வோ, சாவோ போராட்டத்தைப் பற்றி தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

கடல் நீரோட்டத்தின் உந்துதலினாலும், காற்றின் திசை தள்ளல் காரணமாகவும் எங்கள் மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் இருந்து இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. அப்போது எங்கள் மீனவர்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

கைது, சிறைத் தண்டனை என அவர்கள் அடுத்தடுத்துப் பல வாரங்கள் மாபெரும் துன்பத்தைச் சந்திக்க வேண்டி இருக்கிறது. அந்த மீனவர்கள் பயன்படுத்திய படகுகளையும் இதர மீன்பிடி உபகரணங்களையும் இலங்கை அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுகின்றனர்.

அதனால், எங்கள் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய உடமைகள் அனைத்தையும் இழந்து விட வேண்டி இருக்கிறது. இதனால், அவர்களின் குடும்பங்கள் மிகப் பெரும் துயரங்களை சந்தித்து கொண்டிருக்கின்றன.

எனவே, தங்களின் நாட்டில் உள்ள சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் இந்திய மீனவர்களை கருணை அடிப்படையில் அவர்களின் உடமைகளோடு விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இலங்கை கடற்படையினரிடம் பிடியில் இந்திய மீனவர்களை அடித்து உதைக்கும் போக்கினைத் தடுத்து நிறுத்துமாறும் தங்களை வேண்டிக்கொள்கிறேன்.

இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் திடீரென்று நிறுத்தப்பட்டுவிட்டன.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் நின்றுபோன இந்த பேச்சுவார்த்தை நடவடிக்கையை மீண்டும் தொடர்ந்திட ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலமாக இரு நாட்டு மீனவர்களுக்கும் நலம் பயக்கக்கூடிய தீர்வுகள் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.

இந்திய மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை திரும்ப ஒப்படைப்பதில் சட்ட சிக்கல்கள் இருக்கும் என்று தெரியவந்தால், அந்தப் படகு முதலான பொருட்களை ஏலத்தில் விட வேண்டும். கிடைக்கும் வருவாயை எங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி காந்தியடிகளின் 150-ஆவது பிறந்தநாளன்று இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இதன் மூலமாக இந்திய அரசின் நன்மதிப்பை மேலும் அதிகரிப்பதாகவே அமையும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

Sat, 09/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை