பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்

மரிக்கார் எம்.பி தனிநபர் பிரேரணை சமர்ப்பிப்பு

பயங்கரவாதிகளுடனும் பயங்கரவாத அமைப்புகளுடனும் தொடர்புள்ளவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் எனவும் அவர்களின் அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் கோரும் தனிநபர் பிரேரணை ஒன்றை ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

சர்வதேச அல்லது உள்நாட்டு பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளவர்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கு நேரடி அல்லது மறைமுக மாக

உதவிபுரிகின்ற உடந்தையாக இருக்கின்ற நபர்களின் தவறுகள் நீதிமன்றத்தில் நிரூபனமானால் அவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்வதோடு மரண தண்டனையும் வழங்க வேண்டும் என இந்த தனிநபர் பிரேரணையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளையடுத்து எஸ்.எம்.மரிக்கார் எம்.பி இந்த தனிநபர் பிரேரணையை சபையில் சமர்ப்பித்தார்.

எம்.பிகள் முன்வைக்கும் தனிநபர் பிரேரணைகள் நீண்ட காலம் கடந்த பின்னரே ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படுவதோடு விவாதம் நடத்தவும் நீண்டகாலம் பிடிப்பதாக அவர் அண்மையில் பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார். இதே வேளை முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் மத்ரஸாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகள் அனைத்தையும் உடனடியாக கல்வி அமைச்சு பொறுப்பேற்க வேண்டும் என்று கோரும் தனிநபர் பிரேரணை ஒன்றை தயாசிறி ஜெயசேகர முன்வைத்துள்ளார்.இங்கு சிங்கள வரலாற்றை கற்பிப்பதற்கும் அவற்றை கல்வி அமைச்சின் கீழ் கண்காணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் இந்த தனிநபர் பிரேரணையில் கோரப்பட்டுள்ளது.(பா)

Tue, 09/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை