பஹாமஸை சூறையாடிய பயங்கர ‘டொரியன்’ புயல்

மிகவும் ஆபத்தான புயலாக எதிர்பார்க்கப்பட்ட டோரியன் புயல் பஹாமஸ் தீவுகளைச் சூறையாடியது. 285 கிலோ மீற்றர் வேகத்தில் புயல்காற்று வீசியதால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கரீபியன் தீவு அருகே மையம் கொண்டிருந்த சக்திவாய்ந்த டொரியன் புயல், பஹாமஸ் அருகே கரையைக் கடக்கும் என அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து பஹாமஸ் தீவுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. காற்றின் வேகம் மற்றும் மழை வெள்ளத்தினால் வீடுகள் மற்றும் உடமைகள் அடித்துச் செல்லாமல் இருக்க மக்கள் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தனர்.

இதனிடையே அதி பயங்கரமான டொரியன் புயலை தான் கண்காணித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அரசுமுறை பயணமாக போலாந்து செல்ல இருந்த டிரம்ப், தனது பயணத்தையும் ரத்து செய்துள்ளார்.

இந்நிலையில் 5ஆம் நிலை புயலாக அறிவிக்கப்பட்டிருந்த டோரியன் புயல் ஞாயிறு அதிகாலை 12.40 மணிக்கு வடக்கு பஹாமஸ் அருகே உள்ள அபாகோ தீவில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 285 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியது. புயலின் வேகம் காரணமாக மரங்கள் பேயாட்டம் ஆடின. கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு அலைகள் ஆக்ரோஷமாக தரையைத் தாக்கின.

கடலோரக் குடியிருப்புகள் அனைத்தும் அலைகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. தற்போது அபாகோ தீவில் புயல் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தையும் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக இதேபோன்ற சக்திவாய்ந்த புயல் கடந்த 1992ஆம் ஆண்டு பஹாமாவை தாக்கியபோது 65 பேர் உயிரிழந்தனர். ஏறத்தாழ 65 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் டோரியன் புயலின் தாக்கம் அதிகம் இருக்கக் கூடும் என்ற தகவலால் கடலோரப் பகுதிகளில் குடியிருக்கும் 10 இலட்சத்திற்கும் அதிகமானோரை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாநில நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் புளோரிடா, ஜோர்ஜியா மற்றும் கரோலினா ஆகிய பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tue, 09/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை