நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள சூழ்நிலையில், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். அது நியாயமானதல்ல என அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை ஐ.தே.கவால் இலகுவாக வெற்றிபெற முடியும். தேர்தலின் பின்னர் நிறைவேற்று அதிகாரமுறை தொடர்பில் உரிய முடிவுகள் எடுக்கப்படும். நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுவது தொடர்பில் தேர்தல் வாக்குறுதியெதனையும் நாம் கொடுக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பில் அமைந்துள்ள இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் சுட்டிக்காட்டியதாவது,

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது தொடர்பில் நேற்றுமுன்தினம் அவசரமாக அமைச்சரவைக் கூட்டமொன்று கூட்டப்பட்டு கலந்துரையாடப்பட்டது. எவ்வித தீர்மானங்களும், பேச்சுவார்த்தையும் நடத்தப்படாத சூழ்நிலையிலேயே திடீரென இந்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது தொடர்பில் 1994 ஆம் ஆண்டு முதல் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாக்குறுதியளித்திருந்தனர். ஆனால், எவரும் அதனை ஒழிக்கவில்லை. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்திரமே 19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் ஓரளவு அதிகாரங்களை குறைத்துள்ளார்.

2018ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்றிருந்த சந்தர்ப்பத்தில் தான் நிறைவேற்று அதிகாரத்தின் பயங்கரத்தன்மையை நாட்டு மக்கள் அறிந்திருந்தனர். அரசாங்கத்திலிருந்து அனைவரையும் பலவந்தமாக வெளியியேற்றியிருந்தனர். நீதித்துறையின் சுயாதீனம் காரணமாக மீண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அமைந்தது.

நான்கரை வருடங்கள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான சந்தர்ப்பம் இருந்தது. நான்கரை வருடத்தில் 20ஆவது திருத்தச்சட்டத்தை எவரும் கண்டுகொள்ளவில்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிய ஓர் இரு தினங்களில் அதனை ஒழிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் நியாயமானதல்ல.

இது யாருடைய தேவைக்காக் கொண்டுவரபட்டதென அனைவருக்கும் தெரியும். சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டுமென பெரும்பான்மையானவர்கள் ஆதரவளித்துள்ளனர். இத்தேர்தலை ஐ.தே.கவால் இலகுவாக வெற்றிக்கொள்ள முடியும். அதனைத் தடுப்பதற்கு எவரும் முற்பட்டால் அது கட்சிக்கு செய்யும் துரோகமாகும். சஜித் பிரேமதாச கட்டாயம் ஐ.தே.கவின் வேட்பாளராக களமிறக்கப்படுவார். தலைமைத்துவத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவே தொடர்வார் என்றார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்துபண்டார,

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு நான்கரை வருடகால அவகாசம் இருந்தது. ஆனால், தேர்தலொன்று அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் அதனை ஒழிக்க முடியாது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு ஐ.தே.முவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஐ.தே.முவின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலும் இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலின் பின்னரே நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் நாம் முடிவெடுப்போம்.

இத்தேர்தலில் அதனை ஒழிப்பது தொடர்பில் எவ்வித வாக்குறுதியையும் கொடுக்க மாட்டோம். பொதுஜன பெரமுனவும் அதற்கு ஆதரவளிக்காது. அனைவரும் எதிராக இருக்கும் சந்தர்ப்பத்தில் எவ்வாறு அதனை ஒழிக்க முடியும். சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக வருவதை விரும்பாதவர்கள்தான் எவ்வாறு செயற்படுகின்றனர் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

 

Sat, 09/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை