‘அமெரிக்காவுடன் எந்த பேச்சுமில்லை’ஈரானிய உயர்மட்ட தலைவர் உறுதி

அமெரிக்காவுடன் எந்த மட்டத்திலும் பேச்சுவார்த்தை இல்லை என்று ஈரான் உயர்மட்ட தலைவர் ஆயதுல்லா அலி கமனே அறிவித்துள்ளார். சவூதி அரேபிய எண்ணெய் நிலைகள் மீது இடம்பெற்ற தாக்குதல்களுக்கு அமெரிக்கா, ஈரான் மீது குற்றம் சுமத்திய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

ஈரானை அடிபணியச் செய்ய முடியாததாலேயே ஈரானுக்கு எதிராக அதிகபட்ச அழுத்தங்கள் கொடுக்கும் கொள்கையை அமெரிக்கா கடைப்பிடிப்பதாக அலி கமனே நேற்று தெரிவித்தார்.

ஈரானின் பிராந்திய எதிரி நாடான சவூதி அரேபியாவின் எண்ணெய் நிலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடந்த சம்பவத்திற்கு பின்னரே ஈரானிய உயர்மட்ட தலைவர் உரை நிகழ்த்தியுள்ளார். “அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எந்த திட்டமும் எங்களிடம் இல்லை. சவூதி அரேபிய மசகு எண்ணெய் ஆலை தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா திட்டமிடுகிறது. ஆனால் நாங்கள் அதற்கு பலியாக மாட்டோம். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த பய னும் இல்லை. அவர்களுடன் எந்த மட்டத்திலும் பேச்சுவார்த்தை இல்லை” என அலி கமனே கூறினார்.

கடந்த மே மாதம் ஈரானுடனான அணு சக்தி உடன்படிக்கையில் இருந்து வெளியேறி அந்த நாட்டின் மீது மீண்டும் தடைகளை கொண்டுவந்ததை தொடர்ந்தே அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான முறுகல் உச்சம் பெற்றது.

ஈரான் மீதான தடைகளை அகற்றும் வரை அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்று ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி ஏற்கனவே அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Wed, 09/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை