ஜனாதிபதி தேர்தல் டிசம்பருக்குள் நடத்தப்படுவது உறுதி

"யார் என்ன சூத்திரம் தயாரித்தாலும் தடுக்க முடியாது"

எவ்வாறான சூத்திரத்தைத் தயாரித்தாலும் இவ்வருட இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதை எவராலும் தடுக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அல்லது காலத்தை இழுத்தடிப்பதற்கே சகலவிதமான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. எவ்வாறான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் இதனைப் பிற்போட முடியாது. இவ்வருட இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் உறுதியாக நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

ஜே.வி.பியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு கொழும்பு நகரசபை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜே.வி.பியின் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் நாட்டுக்கு திருப்புமுனையான தேர்தலாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மும்முனைப் போட்டி காணப்படும் என பரவலாகப் பேசப்படுகிறது. உண்மையில் ஒழுக்கநெறி தவறியவர்களுக்கும், ஒழுக்க சீலர்களுக்கும் இடையிலான போட்டியாகவே இது அமையும்.

தேசிய அரசியலில் ஏனைய அரசியல் முகாம்களைவிட மேம்பட்ட நிலையிலேயே ஜே.வி.பி காணப்படுகிறது. தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அறிவிப்புக்காக நடத்தப்பட்ட கூட்டத்திலிருந்து இதனைப் புரிந்துகொள்ள முடியும். பாராளுமன்றத்தில் மிகவும் குறைந்த உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும் அங்கு ஆற்றிவரும் பணி ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் உயர்வான நிலையிலேயே காணப்படுகிறது. மேதினம் உள்ளிட்ட கூட்டங்களை நடத்தும்போதும் நாம் ஏனைய கட்சிகளைவிட உயர்வாகவே காணப்படுகின்றோம். தேசிய ரீதியில் முன்னிலையில் காணப்பட்டாலும் பிரதேச ரீதியாகவும் கிராம ரீதியாகவும் பெற்றுக் கொள்ளவேண்டிய வெற்றியை பெற்றுக் கொள்ளாத நிலையில் உள்ளோம். இதற்கான வெற்றியைப் பெறுவதற்கு உள்ளூராட்சி மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகி வருபவர்கள் தம்மிடம் பாரிய பிரசார ஆயுதங்கள் இருப்பதுபோன்றுக் காண்பித்தாலும் அவையாவும் புஷ்வாணங்களாகியுள்ளதாகவும் அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

மகேஸ்வரன் பிரசாத்

Mon, 09/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை