இருநாட்டு மீனவர் பிரச்சினை; கனிமொழி கொழும்பில் பேச்சு

சட்டத்தை தளர்த்துமாறு அரசிடம் கோரிக்ைக

தமிழக மீனவர் படகுகளை ஏலத்தில் விற்று பணத்தை செலுத்தவும் வேண்டுகோள்

எம்.ஏ.எம்.நிலாம், விசு கருணாநிதி

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணுமுகமாகத் தற்போதைய இறுக்கமான சட்டங்களைத் தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறு திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையிலான இந்திய பாராளுமன்றக் குழுவினர், இலங்கை அரசாங்கத்திடம் நேற்று (12) கோரிக்கை விடுத்தனர்.​ இரு நாட்டு மீனவர் விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு,

இலங்கை மீன்பிடித்துறை பிரதியமைச்சர் திலிப் வெதாராச்சியிடம் தாம் கோரிக்கை விடுத்ததாக, பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தினகரனுக்குத் தெரிவித்தார்.

தாம் இந்திய அரசின் பிரதிநிதியாக அல்லாத போதிலும், மனிதநேயத்துடன் அணுகவேண்டிய ஒரு தார்மிகப் பொறுப்பு இருப்பதால், இலங்கை அமைச்சரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் கூறினார்.

தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கொழும்பில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தினகரனிடம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். ஊடகங்களுக்குப் பதிலளிப்பதை அவர் தவிர்த்துக்கொண்டார். எனினும், சில கேள்வித்துளிகளுக்கு இரத்தினச் சுருக்கமாகப் பதில் அளித்தார்.

"இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தமிழ் மக்களைக் காப்பாற்றத் தவறியதாக, திமுக மீது ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது... என்று கேள்வியைத் தொடர்ந்தபோது...பட்டென்று,

"நாங்கள் நாடொன்றை நடத்தவில்லையே!" என்றவரிடம், "அந்தக் கசப்பான கருத்தை மாற்றுவதற்கு எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்ைககளை மேற்கொள்வீர்கள்?" என்று கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டார்!

பிரதியமைச்சருடனான சந்திப்பில் கலந்துகொண்ட இராமநாதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி கருத்து தெரிவிக்கையில், இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்படும்போது அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்படுகின்றன. எனவே, அவர்களை விடுவிக்கும்போது படகுகளையும் சேர்த்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

படகுகள் விடுவிக்கப்படாததால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆகவே, இது தொடர்பிலான சட்டத்தைத் தளர்த்தி, படகுகளையும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஏற்கனவே, தடுத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான படகுகள் விடுவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், அவை தமிழகத்திற்குக் கொண்டுசெல்ல முடியாத அளவிற்குச் சேதமடைந்துள்ளன. எனவே, அந்தப் படகுகளை ஏலத்தில் விற்றுவிட்டு அதற்குரிய பணத்தைச் செலுத்திவிட நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேநேரம், இருநாட்டு மீனவப் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பை நடத்துமாறு கோரியிருப்பதாகவும் நவாஸ்கனி எம்.பி.கூறினார். இதன்படி அரச அதிகாரிகள் மட்டத்தில் சந்திப்பை விரைவில் நடத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்ததோடு ஏனைய கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாகக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Fri, 09/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை