தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனித்தனி வீடுகள்

கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில்

கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனிவீடுகளை அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் தெரிவித்தார்.

அமைச்சர் திகாம்பரத்தின் ஆலோசனையின் பேரில் பாதிப்புக்குள்ளான 10 குடும்பங்களுக்கும் தனி வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கமுடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) மாலை 4.50 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியதுடன்,

லயன் தொகுதியில் அமைந்திருந்த 10 வீடுகள் சேதமடைந்ததுடன், இந்த வீடுகளில் குடியிருந்த 10 குடும்பங்களை சேர்ந்த 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இங்கு விஜயம் மேற்கொண்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் தலைமையிலான குழு, வீடுகள் முற்றாக தீக்கரையான 4 குடும்பங்களுக்கு தற்காலிகமாக தங்குவதற்கு தோட்ட உத்தியோகத்தர்களது நான்கு விடுதிகளை பெற்றுக்கொடுத்துள்ளதுடன், ஏனையவர்களுக்கு வீடுகளை திருத்திக்கொடுத்து தற்காலிகமாக தங்கவைக்கவும் நடவடிக்கை எடுத்தது.

இதுதொடர்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் தெரிவிக்கையில்,

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால் ஏற்கனவே கொட்டக்கலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் 50 தனிவீடுகள் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் அறிக்கையும் பெறப்பட்டு, வீடுகளை அமைப்பதற்கான காணிகளும் தோட்ட நிர்வாகத்தினால் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இத்தீ விபத்து இடம்பெற்றிருந்தது. எனவே பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கும் துரித கதியில் வீடுகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

Wed, 09/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை