இலங்கை இராணுவத்தில் இணையும் தினேஷ் சந்திமால்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமால் இலங்கை இராணுவத்தின் அதிகாரிகளில் ஒருவராக இணைய சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ கிரிக்கெட் கழகத்தின் வீரர்களில் ஒருவராக இணைவதன் மூலமே, தினேஷ் சந்திமால் இலங்கை இராணுவ அதிகாரிகளில் ஒருவராக மாறவிருக்கின்றார்.

விக்கெட்காப்பு, துடுப்பாட்ட வீரரான தினேஷ் சந்திமால், ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையிலேயே இலங்கை இராணுவ கிரிக்கெட் கழகத்தின் வீரராக மாற இருப்பதால் இந்த ஆண்டின் இறுதியில் இடம்பெறவுள்ள உள்ளூர் முதல் தர கிரிக்கெட் தொடரில் தனது தாய்க்கழகமான என்சிசி இற்கு விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்காக கடைசியாக இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்த தினேஷ் சந்திமால், குறித்த தொடரில் பிரகாசிக்க தவறியதனை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடும் சந்தர்ப்பத்தினை இழந்திருந்தார். அதன் பின்னர் கடந்த மாதம் இடம்பெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது மீண்டும் இலங்கை டெஸ்ட் அணியில் தினேஷ் சந்திமால் இணைந்த போதும் குறித்த தொடரில் விளையாடியிருக்கவில்லை.

இதுதவிர தற்போது பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணியிலும் பாதுகாப்பு காரணங்கள் காட்டி இணைய மறுத்திருந்த சிரேஷ்ட வீரர்களில் ஒருவராகவும் சந்திமால் இருந்திருந்தார்.

தினேஷ் சந்திமாலுடன் சகவீரர்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கும் அஜந்த மெண்டிஸ், அசேல குணரத்ன மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோரும் இலங்கை இராணுவப்படையின் சிப்பாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 09/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை