கட்சிகள் தனியாக முடிவெடுப்பதே உகந்தததென அமைச்சரவையில் முடிவு

நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு

அமைச்சரவையில் பேசியவைகளை மீறுவது சம்பிரதாயத்துக்கு முரண்

ஜனாதிபதிமுறையை ஒழிப்பது தொடர்பில்அமைச்சர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்த நிலையில் இறுதி தீர்மானத்தை ஒவ்வொரு கட்சியும் எடுப்பதே பொருத்தமானதாக அமையுமென்றமுடிவுக்கு வந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பிரதமர் நேற்று வெளியிட்டிருந்த விசேட அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.தே.க செயற்பாட்டாளர்களை நேற்று அலரி மாளிகையில் சந்தித்த அவர், இதுதொடர்பான விளக்கங்களை வழங்கியுள்ளார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது; கடந்தவாரம் சிவில் சமூகப் பிரதிநிதிகள் என்னை சந்தித்து எமது அரசாங்கம் செய்த சேவைகள் மற்றும் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் தொடர்பில் கருத்துகளை வெளியிட்டிருந்தனர். 2014ஆம் ஆண்டு ஐ.தே.கவின் தேசிய மாநாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது தொடர்ந்தும் அதனை ஒழிப்பதில் முன்னிற்போம் என்றும் அவர்களுக்கு நான் பதிலளித்திருந்தேன்.

அதன்போது 20 திருத்தச்சட்டத்தை அமைச்சரவையில் நிறைவேற்றுமாறு அவர்கள் கோரினர். அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கான சட்டமூலத்தை சிவில் சமூக பிரதிநிதிகள் கடந்த 16ஆம் திகதி என்னிடம் கையளித்தனர். என்றாலும், ஏனைய அரசியல் கட்சிகளின் ஆதரவின்றி 20ஆவது திருத்தச்சட்ட மூலத்தை பாராளுமன்றில் நிறைவேற்ற முடியாதென நான் அவர்களுக்கு தெளிவுப்படுத்தினேன்.

17ஆம் திகதி சுமந்திரன் எம்.பி, பாராளுமன்றத்தில் என்னை சந்தித்தார். 20ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவது குறித்து நாங்கள் ஜே.வி.பியிடம் கலந்துரையாடியுள்ளோம். ஜனாதிபதிக்கும் 20ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற விருப்பம் உள்ளதென ஜனாதிபதி கூட்டமைப்பிடம் கூறியதாக அவர் என்னிடம் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் ஆதரவு அவசியமென நான் சுமந்திரன் எம்.பியிடம் வலியுறுத்தினேன்.

சுமந்திரன் எம்.பி. இதுகுறித்து விசேட அறிவிப்பொன்றையும் வெளியிட்டுள்ளார். அதனை எவரும் நிராகரிக்கவில்லை. 19ஆம் திகதி காலை 8.10 மணியளவில் ஜனாதிபதி எனக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டிருந்தார். 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் கலந்துரையாட விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்த அழைப்பை விடுக்கட்டுமா என வினவினார்.

சிவில் அமைப்புகள் இதுதொடர்பில் என்னிடம் கலந்துரையாடியதாக நான் ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தினேன். அத்துடன், 20ஆவது திருத்தம் தொடர்பில் சுமந்திரன் எம்.பி தெரிவித்திருந்ததன் அடிப்படையில் அமைச்சரவையில் இதுகுறித்து கலந்துரையாடுவது சிறந்ததென ஜனாதிபதியிடம் கூறினேன். வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை அமைச்சரவையை கூட்டுவது பொருத்தமானதாக இருக்குமென ஜனாதிபதிக்கு பதிலளித்தேன்.

அன்றைய தினம் அமைச்சர் ரவி கருணாநாயக்க எனக்கு தொலைபேசி அழைப்பொன்பெதுவும் மேற்கொள்ளவில்லை. காலை 9 மணியலவில் அமைச்சரவையின் செயலாளர் எனது செயலாளருக்கு அழைப்பொன்றை மேற்கொண்டு பி.ப. 3 மணிக்கு விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவித்தார். பின்னர் சிவில் அமைப்புகள் என்னிடம் கொடுத்திருந்த சட்டமூலத்தை தேவையென்றால் பயன்படுத்துமாறு கூறி எனது செயலாளர் அமைச்சரவையின் செயலாளருக்கு அனுப்பிவைத்தார்.

பி.ப 2 மணிக்கு அமைச்சர்களுடன் தொடர்பு கொண்டு இதுதொடர்பில் அறிவித்தேன்.

அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற போது சந்தர்ப்பத்தில் அமைச்சர்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதால் குறித்த சட்டமூலத்தை சமர்ப்பிப்பதில் பயனில்லையென அமைச்சரவையின் செயலாளருக்கு கூறியிருந்தேன். அமைச்சர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் நான் இது பற்றி விளக்கமளித்திருந்தேன். அமைச்சர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர்.

இறுதி தீர்மானத்தை ஒவ்வொரு கட்சியும் எடுப்பது பொருத்தமானதாக அமையுமென்ற முடிவுக்குவந்தோம். அமைச்சரவையின் உறுப்பினர்களது கருத்துகள் தொடர்பில் பிரச்சினை இருந்தால் அதனை அமைச்சரவையில்தான் பேச வேண்டும்.

அதனை மீறுவது அமைச்சரவையின் சம்பிரதாயதுக்கு முரணானது. ஆகவே, நடைபெற்ற சம்பவத்தை மாத்திரமே இங்கு தெளிவுப்படுத்தியுள்ளேன். எவரையும் இழிவாக்கும் வகையிலோ அல்லது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் வகையிலோ இக்கருத்துகளை முன்வைக்கவில்லை என்றார்.

 

Mon, 09/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை