பாடசாலை அதிபர் அலுவலகத்துக்கு தீ வைப்பு; முக்கிய ஆவணங்கள் நாசம்

கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின் அதிபர் அலுவலகத்திற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டு அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களும் எரிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று அதிகாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

காலை 6.30 க.பொ.த சதாரண தர மாணவர்களுக்கு இடம்பெறும் விசேட வகுப்புக்காக மாணவர்கள் பாடசாலைக்கு சென்ற போது அதிபர் அலுவலகத்திற்குள்லிருந்து புகை வெளியேறுவதனை அவதானித்தனர். மாணவர்கள் உடனடியாக வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றுசேர்ந்து தீயை அணைத்து பாதுகாக்க கூடிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை மீட்டுள்ளனர்.

அதிபர் அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டுள்ளது. எனவே கதவினை உடைத்து உள்ளே சென்ற விசமிகள் மண்ணெண்ய் ஊற்றி தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மண்ணெண்ய் மணம் வீசுவதோடு தீப்பெட்டி ஒன்றும் அலுவலகத்திற்குள் காணப்பட்டுள்ளது.

இந்த தீ காரணமாக பாடசாலை மாணவர்களின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், பரீட்சை பெறுபேறு ஆவணங்கள், ஆசியர்களது விடயங்கள் அடங்கிய கோவைகள், மாணவர்களின் வரவு பத்திரங்கள் என அனைத்து ஆவணங்களும் எரிந்து அழிந்துள்ளன. ஆனால் பாடசாலையின் கணக்கு நடவடிக்கைகள் அடங்கிய ஆவணங்கள் கொண்ட அலுமாரி ஒன்றுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என பாடசாலை அதிபர் இதயசிவதாஸ் தெரிவித்தார். கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர், கரைச்சிக் கோட்டக் கல்வி அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டனர். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

Sat, 09/14/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக