கோட்டாபய தோல்வியுறுவதே மஹிந்த ராஜபக்ஷவின் விருப்பம்

ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ வேட்பாளராக களமிறக்கப் பட்டுள்ளதால் அவருடைய வெற்றியை கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்மனதால் எதிர்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

1,950 ரூபா மில்லியன் நிதியொதுக்கீட்டில் ஒருகொடவத்த முதல் அம்பதலை வரையான லோ லெவல் வீதி அபிவிருத்தி திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், தற்பொழுது நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. இந்தத் தேர்தல் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் முடிவடையும் போது, நாட்டில் மீண்டும் ஒரு முறை 07ஆவது நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒருவரே தெரிவு செய்யப்படுவார். அதன் பிறகு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு நடத்தப்படுகின்ற பொதுத் தேர்தலில் 130 ஆசனங்களை வெற்றிகொண்டு ஐக்கிய தேசியக் கட்சி தனித்துவமான அரசாங்கமொன்றை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும். இப்படிச் சொல்வதற்கு எமக்கு தெளிவான காரணங்கள் உள்ளன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ராஜபக்ஷ பரம்பரையை தோற்கடித்தது களவு, ஊழல், மோசடி, வீண்விரயம் போன்றவற்றை மாத்திரம் இல்லாதொழிப்பதற்கல்ல. வெள்ளை வான் யுகம், இராணுவ ஆட்சி யுகம் மற்றும் சர்வாதிகார யுகத்தை இல்லாமல் செய்வதற்கே மக்கள் ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

எனவே கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அமைச்சுக்களின் செயலாளர்களாக ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல்களே நியமிக்கப்படுவர். மஹிந்த ராஜபக்ஷவினாலும் கோட்டாபயவை கட்டுப்படுத்த முடியாமல் போகும்.

இதனால் மஹிந்த ராஜபக்ஷ உள்மனதால் கோட்டாபய தோல்யடைவதையே விரும்புவார். அப்போது தான் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கட்சித் தலைமைப் பதவியை தக்க வைத்துக்கொள்ள முடியும். அதனைத் தொடர்ந்து 05 வருடங்களின் பிறகு தனது மகனுக்கு மொட்டுக் கட்சியின் தலைவராக முடிசூட முடியும். தப்பித் தவறியேனும் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றால் நாமல் ராஜபக்ஷவின் எதிர்காலம் முடிந்துவிடும். மறுபுறத்தில் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத பெரும்பான்மையான மத்திய தர வகுப்பினர் இராணுவ, சர்வாதிகார ஆட்சி வருவதற்கு பயப்படுகின்றனர். ஊடகவியலாளர்களும் அச்சப்படுகின்றனர். அவர்கள் ஊடகத்துறையில் லசன்த விக்ரமதுங்க போன்றவர்களுக்கு நடந்ததை நினைக்கின்றனர். இராணுவ யுகத்தையும் சர்வாதிகார யுகத்தையும் இல்லாமல் செய்வதற்கே ஊடகங்களும், மத்திய தர வர்க்கத்தினரும், சிவில் சமூக அமைப்புக்களும் அயராது உழைத்துவருகின்றன என்றார்.

Thu, 09/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை