திட்டமிட்டபடி நேபாளத்தில் டிசம்பர் மாதம் நடைபெறும்

தெற்காசிய விளையாட்டு விழா:

தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால் 2 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்ற தெற்காசிய விளையாட்டு விழாவை திட்டமிட்டபடி எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடத்துவதற்கு நேபாள ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்தின் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து இம்முறை தெற்காசிய விளையாட்டு விழா திட்டமிட்டபடி இவ்வருட இறுதியில் நடைபெறும் என இலங்கையின் தேசிய ஒலிம்பிக் சம்மேளனம் அறிவித்துள்ளது.

முன்னதாக 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழா, கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவின் குவஹாத்தியில் நடைபெற்றதுடன், அடுத்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு நேபாளத்துக்கு வழங்கப்பட்டது.

எனினும், குறித்த போட்டித் தொடர் கடந்த வருடம் நடைபெறவிருந்தாலும், நேபாள அரசு அதற்கான நிதியினை ஒதுக்குவதற்கு முன்வராமை, அந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்தில் நிலவிய முரண்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் போட்டிகளை நடத்தும் சந்தர்ப்பத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனம் கடந்த வருடம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில், நேபாள அரசாங்கத்தின் தலையீட்டினால் ஏற்கனவே திட்டமிட்டபடி தெற்காசிய விளையாட்டு விழாவை தாமே நடத்தவுள்ளதாக அந்நாட்டு ஒலிம்பிக் சங்கம், தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது.

இதனையடுத்து தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த ஜுலை மாதம் நேபாள தலைநகர் கத்மண்டுவில் இடம்பெற்றது. இதன்போது தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்துவதற்கு நேபாள அரசு அனுமதி வழங்கிய நிலையில், அதற்கான அனுமதியை தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனம் குறித்த கூட்டத்தொடரின் போது வழங்கியது.

Mon, 09/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை