அக்கரைப்பற்றில் சமாதான கலந்துரையாடல்

சமாதானமும் சமூகப்பணியும் நிறுவன வழிகாட்டலின் கீழ் தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையிலான கருத்து முரன்பாடுகளை களைந்து சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல் அக்கரைப்பற்று விபுலானந்தா அபிவிருத்தி நிலைய கேட்போர் கூடத்தில் இன்று (15) நடைபெற்றது.

சமாதானமும் சமூகப்பணியும் நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் தலைவர் எம்.எஸ்.ஜெலீல் தலைமையில் ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேச நல்லிணக்க குழுவை தெளிவூட்டும் வகையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அக்கரைப்பற்று பிரதேச நல்லிணக்க இணைப்பாளர் ஏ.ஜி.ஏ.கபூர் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச நல்லிணக்க இணைப்பாளர் த.கயிலாயபிள்ளை உள்ளிட்ட உறுப்பினர்களும் சமாதானமும் சமூகப்பணி நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

கடந்த கால கசப்புணர்வுகளை களைந்து தமிழ் முஸ்லிம் மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அவற்றை நடைமுறைப்படுத்தும் வகையில் செயற்பட குழுக்களும் தெரிவு செய்யப்பட்டன.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தடையாகவுள்ள காணி உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களும் இங்கு பலரால் முன்வைக்கப்பட்டன.

மேலும் எதிர்வரும் தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் சார்ந்தவர்களுடைய கருத்துக்களால் மக்களிடையே கருத்து முரண்பாடுகள் தோன்றலாம் எனவும் இதனால் பல விடயங்களில் தீர்வினை எட்டமுடியாமல் போகலாம் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இனங்களிடையே கசப்புணர்வுகள் ஏற்படாமல் மக்களை தெளிவூட்ட வேண்டிய பொறுப்பு பிரதேச நல்லிணக்க குழுக்களுக்கு அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

பிரச்சினைகள் தோன்றும்போது நேரடியாக சம்மந்தப்பட்டவர்களுடன் மக்கள் சார்பிலான நல்லிணக்க குழு பேசுவது எனவும் தீர்வு காணப்பட்டது.

(வி.சுகிர்தகுமார் - வாச்சிக்குடா விஷேட நிருபர்)    

Sun, 09/15/2019 - 15:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை