எகிப்தில் ஜனாதிபதி சிசிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசிக்கு எதிராக எகிப்தில் முதல் முறை ஆர்ப்பாட்டங்கள் வெடித்திருப்பதோடு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

2011 எகிப்து மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் மையமாக இருந்த தஹ்ரிர் சதுக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் சிசியை பதவி விலகும்படி கோஷமெழுப்பினர்.

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இராணுவத் தளபதியாக இருந்து இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவிக்கு வந்த சிசி மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.

இதில் குறைந்தது 74 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏ.எப்.பீ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

“சிசி வெளியேறு” மற்றும் “அரசை கவிழ்ப்பதற்கு மக்களின் விருப்பம்” என்பன எகிப்தியரிடையே ட்விட்டரில் பிரதான கோசமாக மாறியுள்ளது.

எகிப்தின் இரண்டாவது பெரிய நகரான அலெக்சாண்ட்ரியா அதேபோன்று சுயேஸ் மற்றும் வடக்கு கெய்ரோவின் மஹல்லா எல் குப்ரா நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

2013 ஆம் ஆண்டு எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்வான முதல் ஜனாதிபதி முஹமது முர்சியை பதவி கவிழ்த்தே சிசி ஆட்சிக்கு வந்தார்.

அவர் முன்னெப்போதும் இல்லாத வகையில் தமது எதிர்ப்பாளர்களை ஒடுக்கி ஆயிரக்கணக்கானவர்களை சிறையில் அடைத்திருப்பதாக மனித உரிமை குழுக்கள் குறிப்பிடுகின்றன.

சிசி 2030 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் நீடிப்பதற்கு வழி வகுக்கும் அரசியல் அமைப்பு மாற்றம் ஒன்றுக் கடந்த ஏப்ரலில் இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தபோதும் அதில் 44 வீத வாக்குப் பதிவே இடம்பெற்றிருந்தது. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2018 இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சிசி 97 வீத வாக்கள் வென்று வெற்றியீட்டியதாக அறிவிக்கப்பட்டது.

Mon, 09/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை