கிழக்குத் தமிழர் கூட்டணிக்கான ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்து

கோட்டாவுடனும் பேச்சு நடத்துவோம்

கிழக்குத் தமிழர் கூட்டணிக்கான உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதுடன், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடமும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கிழக்கு தமிழர் கூட்டணி அல்லது ஒன்றியத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இன்னும் ஓரிரு வாரங்களில் அதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்பதுடன், கிழக்குத் தமிழர்களாக நாம் கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க முடியாதென கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. யுத்தம் முடிந்த சூட்டோடு அத்தருணத்தில் இராணுவத் தளபதியாகவிருந்த சரத் பொன்சேகாவுக்கு கூட்டமைப்பால் ஆதரவளிக்க முடியுமென்றால் கோட்டாவுக்கு ஏன் ஆதரவை வழங்க முடியாது.

நாம் இங்கு எவரையும் உத்தமர்களாக்க முற்படவில்லை. எவரும் இங்கு புனிதர்கள் அல்லர். மகிந்தவின் காலத்தில் வெள்ளை வேன் இருந்தது என்றால் பிரேமதாசவின் காலத்தில் வெள்ளை பஸ் இருந்தது. கிழக்கு பல்கலையில் 200ற்கும் அதிகமான தமிழ் மாணவர்கள் வெள்ளை பஸில் கடத்தப்பட்டனர்.

அவர்களுக்கு என்ன நடந்ததென இன்றுவரை தெரியாதுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவுடன் நிபந்தனைகள் அடிப்படையில் நாம் பேச வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கக் கூடியவராக மகிந்தவும், கோட்டாவுமே உள்ளனர் என்றார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 09/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை