சீன பொருட்கள் மீதான கூடுதல் வரியை அமெரிக்கா ஒத்திவைப்பு

சீன இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் போரால் இரு நாடுகளும் இறக்குமதி பொருட்களுக்கு போட்டி போட்டு வரிகளை விதித்து வருகின்றன. இதனால் உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 25 ஆயிரம் கோடி டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு 25 வீதத்தில் இருந்து 30 வீதமாக வரி ஒக்டோபர் முதலாம் திகதி முதல் உயர்த்தப்படுவதாக டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் சீனாவில் 70ஆவது தேசிய தினம் ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாட இருப்பதால், கூடுதல் வரி விதிப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று சீனாவின் துணை பிரதமர் லியுஜி அமெரிக்காவுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அதனை ஏற்று நல்லெண்ண நடவடிக்கையாக கூடுதல் வரி விதிப்பு ஒக்டோபர் முதலாம் திகதிக்கு பதில் ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க மற்றும் சீன நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாத நடுப்பகுதியில் வொஷிங்டனில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வர்த்தகப் போர் ஆரம்பித்ததில் இருந்து முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறால், பண்ணை விலங்குகளுக்கான மீன் உணவு, புற்றுநோய்க்கான மருந்து போன்ற 16 வகைப் பொருட்களுக்கு சீன வரிவிதிப்பு ஆணையம் வரிவிலக்கு அளித்துள்ளது. வரும் 17ஆம் திகதி அமுலுக்கு வரும் இந்த வரிவிலக்கு ஓராண்டுக்கு அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

16 வகைப் பொருட்களில் 12 பொருட்களுக்கு ஏற்கனவே வரி செலுத்தியவர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் இதர நான்கு பொருட்களுக்கு செலுத்தப்பட்ட வரிப்பணம் திரும்பக் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில அமெரிக்கப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த பரிந்துரைகளைப் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று சீனா கூறியுள்ளது.

Fri, 09/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை