ப்ரீமியர் லீக்கில் சிட்டி அணி சாதனை வெற்றி

18 நிமிடங்களுக்குள் ஐந்து கோல்களை புகுத்திய மன்செஸ்டர் சிட்டி வட்போர்டுக்கு எதிரான போட்டியை 8–0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டி ப்ரீமியர் லீக் வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துகொண்டது.

கடந்த வார இறுதியில் நோர்விச் சிட்டியிடம் தோல்வியை சந்தித்த நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி தனது சொந்த மைதானமான எட்டிஹாட் அரங்கில் ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் வட்போட்டை எதிர்கொண்டது.

போட்டியின் முதல் நிமிடத்தில் கெவின் டி ப்ருயின் பரிமாற்றிய பந்தை பெற்ற டேவிட் சில்வா அதனை கோலாக மாற்ற 6 நிமிடங்களின் பின் செர்கியோ அகுவேரா தனது 100 ஆவது ப்ரீமியர் லீக் கோலை பெற்று மன்செஸ்டர் சிட்டியை 2–0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெறச் செய்தார்.

இத்தோடு நிற்காத மன்செஸ்டர் சிட்டி 12 ஆவது நிமிடத்தில் ரியாட் மஹ்ரெஸ் ப்ரீ கிக் ஒன்றின் மூலம் கோல் பெற தனது கோல் எண்ணிக்கையை மூன்றாக உயர்த்திக் கொண்டதோடு பெர்னார்டோ சில்வா தலையால் முட்டியும் நிகொலஸ் ஒட்டமண்டி வலைக்குள் பந்தை தட்டிவிடவும் சிட்டி 18 நிமிடங்களுக்குள் 5–0 என முன்னிலை பெற்றது. ப்ரீமியர் லீக் வரலாற்றில் முதல் 18 நிமிடங்களுக்குள் 5 கோல்கள் புகுத்திய முதல் அணியாகவும் மன்செஸ்டர் சிட்டி பதிவானது.

இந்நிலையில் இரண்டாவது பாதியில் கெளரவமான தோல்வி ஒன்றை எதிர்பார்த்து வட்போர்ட் தனது தற்காப்பை பலப்படுத்தியபோதும் மன்செஸ்டர் சிட்டி சார்பில் பெர்னார்டோ சில்வா 48, 60 ஆவது நிமிடங்களில் மேலும் இரண்டு கோல்களை பெற்று தனது ஹட்ரிக் கோலை பூர்த்தி செய்தார்.

போட்டி முடிவதற்கு 5 நிமிடங்கள் இருக்கும்போது மன்செஸ்டர் சிட்டி அணிக்காக மற்றொரு கோலை கெவின் டி ப்ருயின் பெற்றார்.

இந்த வெற்றியுடன் மன்செஸ்டர் சிட்டி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலை விடவும் ஒரு புள்ளி மாத்திரமே குறைவாக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

அத்துடன் 1995 இல் ஸ்பிக் டவுன் அணிக்கு எதிராக மன்செஸ்டர் யுனைடட் அணி பெற்ற 9–0 என்ற கோல்கள் கணக்கின் வெற்றிக்கு பின்னர் ப்ரீமியர் லீக் வரலாற்றில் இரண்டாவது மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்வதற்கு மன்செஸ்டர் சிட்டி அணியால் முடிந்தது.

Mon, 09/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை