பிரிட்டன் பாராளுமன்றில் பெரும்பான்மை இழந்தார் பிரதமர் பொரிஸ் ஜோன்சன்

உடன்படிக்கை இன்றி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கு அந்நாட்டு பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் முயற்சி பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. கன்சர்வேடிவ் கட்சியின் அதிருப்தியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரெக்சிட்டை தாமதப்படுத்தக் கோரும் சட்டமூலம் ஒன்று பிரிட்டன் பாராளுமன்றத்தில் 328 வாக்குகளால் வெற்றி பெற்றிருப்பதோடு அதற்கு எதிராக 301 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஜோன்சனின் சொந்த கட்சியைச் சேர்ந்த 21 அதிருப்தி எம்.பிக்கள் இதற்கு ஆதரவாக வாக்கயளித்துள்ளனர்.

எனினும் பிரெக்சிட்டுக்காக ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு பின்னர் அதனை நீடிக்கும் கோரிக்கைக்கு தாம் நிர்ப்பந்திக்கப்பட்டால் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி பிரெக்சிட்டை தாமதப்படுத்தும் சட்டமூலம் ஒன்றை எம்.பிக்கள் நிறைவேற்றவுள்ளதோடு, இதனைத் தொடர்ந்து புதிய தேர்தல் ஒன்று நடத்தப்படுவது குறித்த வாக்கெடுப்பு இடம்பெற வாய்ப்பு உள்ளது. கடந்த செவ்வாயன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், எம்.பிக்களின் இந்த சட்டமூலம், ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்சிட் பேச்சுவார்த்தையை கட்டுப்படுத்துவதாக இருப்பதோடு, அது மேலும் பரபரப்பு, மேலும் தாமதம், மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.

ஒக்டோபரில் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதை தவிர தமக்கு வேறு தேர்வு ஒன்று இல்லை என்று அவர் எம்.பிக்களிடம் குறிப்பிட்டார். “இந்த நாட்டு மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார். பிரெசல்ஸில் தீர்க்கமான ஐரோப்பிய ஒன்றிய மாநாடு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒக்டோபர் 15 ஆம் திகதி தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு பிரிட்டன் அரசு திட்டமிடுவாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உடன்படிக்கை இன்றி வெளியேறுவது தொடர்பில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று குறிப்பிடும் தொழிலாளர் கட்சி பொதுத் தேர்தலுக்கான அழைப்புக்கு தமது கட்சி ஆதரவளிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுகிறபோது ஒப்பந்தம் எதுவும் இல்லாமல் பிரிட்டன் வெளியேறுமேயானால் அது அரசியல் தற்கொலையாக அமையும் என்று கன்சர்வேட்டிவ் தலைவர்களில் ஒருவரான ஜெர்மி ஹண்ட் ஆரம்பத்திலேயே எச்சரித்திருந்தார்.

ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுகின்ற நடவடிக்கை பொதுத் தேர்தலை கொண்டுவரும். இதனால் தொழிலாளர் கட்சி அதிகாரத்தை பெறலாம் என்று அவர் தனது எச்சரிக்கையில் குறிப்பிட்டார்.

பிரெக்சிட் காலக்கெடு முடிவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் எம்.பி.க்கள் செப்டம்பரில் தங்கள் பணியைத் ஆரம்பித்து சில நாள்களிலேயே பாராளுமன்றம் இடைநீக்கம் செய்யப்படும் என்று கடந்த வாரத்தில் அறிவிக்கபட்டது.

பாராளுமன்றம் இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர் அரசின் உரை ஒக்டோபர் 14ஆம் திகதி இடம் பெறும் என்றும் அதில் தமது ஆச்சரியமளிக்கும் திட்டம் பற்றிய விபரங்கள் வெளியாகும் என்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்தார்.

இதனால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதைத் தடை செய்யும் சட்டம் ஒன்றை ஒக்டோபர் 31ஆம் திகதிக்கு நிறைவேற்றுவதற்கு எம்.பிக்களுக்குத் தேவைப்படும் காலம் இருக்காது.

இது அரசியலமைப்புச் சட்ட விதிமீறல் என்று ஹவுஸ் ஒப் கொமன்ஸ் அவைத்தலைவர் ஜோன் பெர்கோ கூறினார்.

Thu, 09/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை