ரூபவாஹினியை பொறுப்பேற்றதை ஏற்கவே முடியாது

பதவி விலகினாலும் பிரச்சினை தீராது

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்திருப்பது ஜனநாயகத்திற்கும் ஊடக சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாகும் என ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். ரூபவாஹினிக்கு பொறுப்பான அமைச்சராக வர்த்தமானியூடாக எனது பெயர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலே நான் தலைவரை மாற்றி புதியவரை நியமிக்க நடவடிக்கை எடுத்தேன்.ஆனால் ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி அதனை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்திருப்பதே இந்த சர்ச்சைக்கு காரணம் எனவும் அவர் கூறினார்.

ஊடகத்துறை

அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ரூபவாஹினியை பொறுப்பேற்றிருப்பதன் பின்னணியில் ஒக்டோபர் 26 சதியை போன்ற சதியிருப்பதாக சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நான் அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதால் இந்த பிரச்சினை தீர்ந்துவிடாது என்று கூறிய அவர், ஊடக சுதந்திரத்தை மீறும் இந்த செயலுக்கு எதிராக ஊடக அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்குமென எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

கடந்த பெப்பரவரி மாதம் நான் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டேன். 2014 முதல் வீழ்ச்சி அடைந்திருந்த ரூபவாஹினி கூட்டுத் தாபனம் 2018 மோசமாக பின்னடைந்தது.இந்த நிலையிலே இதன் தலைவர் அடங்கலான பணிப்பாளர்களை மாற்ற நான் நடவடிக்கை எடுத்தேன்.4 தடவைகள் புதியவர்களை நியமிக்க முயன்றாலும் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.தி​றை​சேரியில் பணம் பெற்று இயங்கும் நிலையே காணப்படுகிறது.கடந்த வருடம் 330 மில்லியன் பெற்று ஊழியர் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.மே மாதத்தில் 450 மில்லியன் பெற அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

பொறுப்பான அமைச்சரான எனக்கு அறிவிக்காமலே ரூபவாஹினி ,பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.இதனூடாக தொலைக்காட்சி சட்டமும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இனி தொலைக்காட்சி நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சில் தான் அனுமதிப்பத்திரம் பெற வேண்டும். இது ஊடக சுதந்திரத்திற்கு பாரிய பிரச்சினையாக அமையும்.

ஜனாதிபதியுடன் எனக்கு அரசியல் ரீதியான பிரச்சினையன்றி கொள்கை ரீதியான பிரச்சினையே இருக்கிறது.வரலாற்றில் ஒருபோதும் ரூபவாஹினி பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது கிடையாது.யுத்த காலத்திலும் கூட அவ்வாறான நிலை ஏற்படவில்லை.

தேர்தல் நெருங்குகையில் இதனை பொறுப்பேற்றது தொடர்பில் சந்தேகம் உள்ளது. இதன் பாரதூரம் உணர்ந்து ஜனாதிபதி உரிய தீர்வு வழங்க வேண்டும்.

முறையான நிர்வாகம் இருந்தாலே இந்த நிறுவனத்தை முன்னேற்ற முடியும்.அதற்கான மாற்றங்களை தான் செய்ய முயன்றேன்.பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் எனக்கு தலைவரை நியமிக்கும் உரிமை உள்ளது.அதே வேளை ஜனாதிபதிக்கும் எந்த ஒரு நிறுவனத்தையும் பொறுப்பேற்கும் அதிகாரம் இருக்கிறது.

நான் குண்டர்களை ரூபவாஹினிக்கு அனுப்பியதாக சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால் எனது பிரத்தியேக செயலாளர்கள் சிலரை தான் அங்கு அனுப்பியிருந்தேன். நான் ஒருபோதும் வன்முறையை கையிலெடுப்பவன் அல்ல.சட்டத்தை மதித்து நடப்பவன்.சமூக ஊடகங்கள் என்மீது சேறு பூசுகின்றன என்றார்.

முஜீபுர் ரஹ்மான் எம்.பி குறிப்பிட்டதாவது,

சுதந்திரக் கட்சி மாநாட்டில் கடந்த வாரம் உரையாற்றிய ஜனாதிபதி,நிறைவேற்று ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது என்றும் பிரதமர் பதவிக்கே போட்டியிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஒரு வாரத்திலேயே நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ரூபவாஹினியை அவர் பொறுப்பேற்றுள்ளார்.19 ஆவது திருத்தத்தின் கீழ் சகல அதிகாரங்களும் குறைக்கப்படவில்லை.நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டே பலர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர்.88/89 காலப்பகுதியில் கூட ரூபவாஹினி பொறுப்பேற்கப்படவில்லை.ஒக்டோபர் ஆட்சி மாற்ற சதியின் போதும் ரூபவாஹினிக்கும் குண்டர்கள் புகுந்து சொத்துக்களை சேதம் செய்த போது கூட ரூபவாஹினி பொறுப்பேற்கப்படவில்லை.எதிர்வரும் காலத்தில் இன்னும் எத்தனை நிறுவனங்கள் பொறுப்பேற்கப்படும் என்று தெரியாது என்றார்.(பா)

ஷம்ஸ் பாஹிம்

Thu, 09/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை