பிரதமரின் நிறைவேற்று அதிகார ஒழிப்பு யோசனை நிராகரிப்பு

நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பதற்கான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரேரணை நேற்றைய விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் முற்றாக நிராகரிக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவரச பிரேரணையாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக நீக்க வேண்டுமென்ற யோசனையை சமர்ப்பித்தார்.இந்த யோசனையை அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்து ஜனாதிபதி தேர்தலொன்றுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இப் பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாதென கடுமையான தொனியில் எடுத்துரைத்தனர்.

அமைச்சர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், சஜித் பிரேமதாஸ உட்பட அரசின் முக்கிய அமைச்சர்கள் பலரும் இப் பிரேரணைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். நீண்ட நேர வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தில் இப்பிரேரணை நிராகரிக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பிரேரணையைச் சமர்பிப்பதற்கு விசேட அமைச்சரவை கூட்டப்பட்டதற்கும் அமைச்சரவையில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளித்த அமைச்சரவையின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் கேட்டுக் கொண்டதற்கமையவே இந்த விசேட அமைச்சரவையை கூட்டியதாகவும் தனது சுய விருப்பத்தின் மீது கூட்டப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இந் நடவடிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ, இந்த முயற்சி எப்போதோ முடிவுக்கு வந்திருக்க வேண்டும். தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அவசரம் ஏன்? யார் மீது பழிவாங்கும் முயற்சி? என்றும் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் மனோ கணேசன் கருத்துத் தெரிவிக்கையில், இந்த இரகசிய நாடகத்தை அரங்கேற்றுவதில் முக்கியமான சிலர் தொடர்புபட்டிருப்பதாகவும் எதிர்ப்பு வந்ததன் காரணமாக முக்கியமானவர் தப்பிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஜனநாயக அரசியல் செயற்பாடுகளில் கனவான் தனத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நேர்மையற்ற விதத்தில் செயற்பட முனைவது அநாகரிகமான செயலாகுமென கூறினார்.

எம்.ஏ.எம். நிலாம்

Fri, 09/20/2019 - 13:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை