யாழ்.பல்கலைக்கழக வெற்றிடங்களுக்கு வெளி மாவட்டத்தினரை நியமிப்பதை ஏற்க முடியாது

வடமாகாணத்துக்கே முதலிடம் தேவை

வட மாகாணத்தில் நிலவுகின்ற அரச நிறுவனங்களின் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்யும்போது வட மாகாணத்தில் உள்ளவர்களுக்கே முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்.பல்கலைக்கழத்தின் வெற்றிடங்களுக்கு வெளி மாகாணத்தவர்களை நியமிக்க முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று டக்ளஸ் தேவானந்தா 27/2 நிலையியல் கட்டளையின் கீழ் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆட்சேர்ப்புப் பட்டியலில் வடக்கை சேர்ந்த பலரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் எழுப்பிய கேள்வியின் போதே குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்விச் செயற்பாடுகள் அல்லாத ஏனைய பணிகளுக்கென வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 400க்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில், பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள ஆட்சேர்ப்புப் பட்டியலில் அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன?

கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடாத ஏனைய பணியாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதில் பக்கச் சார்புகளும், முறைகேடுகளும் காணப்படுவதாகவும், இத்தகைய நிலைமைகள் அரசியல் தலையீடுகளாக கணிக்கப் பெறுவதாகவும் பணியாளர்களது சங்கமானது குற்றச்சாட்டினை முன்வைத்து, போராட்டமொன்றையும் நடத்தி வருகின்றது.

வடக்கு மாகாணத்தில் வேலைவாய்பற்று பல ஆயிரக் கணக்கானோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அங்கே நிலவுகின்ற அனைத்து அரச நிறுவனங்களின் வெற்றிடங்களுக்கும் ஆட்சேர்ப்புச் செய்கின்ற போது, வடக்கு மாகாணத்தில் உள்ளவர்களுக்கே முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 09/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை