அமேசன் காட்டுத் தீயை அணைக்க உதவுமாறு அக்கரைப்பற்றில் விழிப்புணர்வுப் பேரணி

உலகின் நுரையீரல் என வர்ணிக்கப்படும் அமேசன் காடு நீண்ட நாட்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. எவராவது அணைத்து விட உதவி செய்யுங்கள் எனும் தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை (07) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.

வைத்திய அத்தியட்சகர் ஐ.எம்.ஜவாஹிரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற இவ் விழிப்புணர்வுப் பேரணியின் போது வைத்தியசாலையில் சேவையாற்றும் பெருந்தொகையான வைத்திய அதிகாரிகள், நிருவாகத்துறை உத்தியோகத்தர்கள், தாதி உத்தியோகத்தர்கள், சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

வைத்தியசாலை வளாகத்தில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வுப் பேரணி அக்கரைப்பற்று, கல்முனை பிரதான வீதி வழியாகச் சென்று மீண்டும் வைத்தியசாலை வளாகத்தினை சென்றடைந்தது.

அமேசன் காடுகளில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டு செயற்படுவதோடு, எதிர்கால சந்ததியினர் சுத்தமாக சுவாசிக்கக் கூடிய வகையில் காடுகளின் அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திய வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டோர் சென்றனர்.

இதன்போது இயற்கை வளங்களை பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி விஷேட தெளிவுரை வழங்கப்பட்டது.

(அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)

Tue, 09/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை