பாகிஸ்தானில் பாதுகாப்பை மீளாய்வு செய்ய அரசின் உதவியை நாடும் இலங்கை கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கான இலங்கை தேசிய அணியின் திட்டமிடப்பட்டிருக்கும் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை குறித்து மீளாய்வு ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை அரசின் உதவியை இலங்கை கிரிக்கெட் நாடியுள்ளது.

தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து இலங்கை கிரிக்கெட்டுக்கு எச்சரிக்கை ஒன்று கிடைக்கப்பெற்றதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையில், பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின்போது இலங்கை அணிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதற்கான சாத்தியம் ஒன்று பற்றி நம்பகமான தகவல்கள் பிரதமர் அலுவலகத்திற்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னர் தீவிர அவதானம் செலுத்தும்படியும் நிலைமை குறித்து ‘மீளாய்வு’ ஒன்றை செய்யும்படியும் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி, இந்த மாத இறுதியில் இருந்து அடுத்த மாதம் நடுப்பகுதி வரை கராச்சி மற்றும் லாஹூர் நகர்களில் பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று ரி -20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இதற்கான ஒருநாள் மற்றும் ரி 20 போட்டிகளுக்கான வெவ்வேறு இலங்கை குழாம்கள் இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவால் புதன்கிழமை (11) அறிவிக்கப்பட்டது. எனினும் பாதுகாப்பை காரணமாகக் கொண்டு இலங்கை அணியின் பத்து முன்னணி வீரர்கள் இந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் பாதுகாப்புக் குழு ஒன்று பாகிஸ்தான் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய்ந்து உறுதிப்படுத்திய பின்னரே இலங்கை அணியின் பாகிஸ்தானுக்கான இந்த சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

Fri, 09/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை