கோலியின் சாதனையுடன் தென்னாபிரிக்காவை வீழ்த்திய இந்தியா

விராட் கோஹ்லியின் அரைச் சதம் மற்றும் ஷிகர் தவானின் பொறுப்பான ஆட்டத்தால் தென்னாபிரிக்கா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி ரி-20 தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ரி -20 தொடரில் பங்கேற்கிறது. இதில் தர்மசாலாவில் நடைபெறவுள்ள முதலாவது ரி-20 போட்டி பலத்த மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் இரத்தானது.

இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது ரி-20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் கடந்த (18) நடைபெற்றது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் விராட் கோலி, முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

தென்னாபிரிக்கா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி கொக்கும், ஹெண்ட்ரிக்ஸும் களம் இறங்கினர். ஹெண்ட்ரிக்ஸ் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

தொடர்ந்து 3ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பவுமாவும், டி கொக்கும் இந்திய பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ஓட்டக் குவிப்பில் ஈடுபட்டனர். நவ்தீப் சைனி பந்தில் டி கொக் (52 ஓட்டங்கள், 37 பந்துகள்) ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் தென்னாபிரிக்க அணியின் ஓட்ட வேகம் குறைந்தது.

சிறப்பாக விளையாடி வந்த பவுமா 49 ஓட்டங்களை எடுத்து தீபக் சாஹர் பந்தில் ஆட்டமிழந்தார். இவர் ஒரு ஓட்டத்தினால் தன் முதல் ரி -20 அரைச் சதத்தை தவறவிட்டார். அதன்பின் வந்த வீரர்கள் சொல்லிக்கொள்ளும் படி விளையாடவில்லை.

தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக் இழப்புக்கு 149 ஓட்டங்களை எடுத்தது.

இந்திய அணி சார்பில் தீபக் சாஹர் இரண்டு விக்கெட்டுக்களையும் நவ்தீப் சைனி, ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். அதன்பின்னர் 150 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 12 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அடுத்ததாக ஷிகர் தவானுடன், விராட் கோலி ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான் 40 (31) ஓட்டங்களுக்கு பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரிஷாப் பாண்ட் 4(5) ஓட்டங்களுடன் வெளியேறினார். தொடர்ந்து அதிரடி காட்டிய கோலி தனது 22ஆவது ரி-20 அரைச் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.

சர்வதேச ரி -20 அரங்கில் அதிக அரைச் சதமடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தையும் அவர் பெற்றுக்கொண்டார். இப்பட்டியலில் இந்தியாவின் ரோஹித் சர்மா (17) மற்றும் நியூசிலாந்தின் மார்டின் கப்டில் (14) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

மேலும், ரி-20 அரங்கில் அதிக ஓட்டங்கள் (2,441 ஓட்டங்கள்) குவித்த வீரர்கள் பட்டியலில் சக வீரர் ரோஹித் சர்மாவை (2,434 ஓட்டங்கள்) முந்தி முதலிடம் பிடித்தார்.

தொடர்ந்து விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் இந்திய அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் விராட் கோலி 72(52) ஓட்டங்களையும், ஸ்ரேயாஸ் அய்யர் 16(14) ஓட்டங்களையும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 19 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றி வெற்றியீட்டியது. தென்னாபிரிக்க அணியின் சார்பில் அதிகபட்சமாக போர்சுய்ன், பெலக்வாயோ மற்றும் தப்ரிஸ் ஷம்சி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 1க்கு 0 என முன்னிலை பெற்றது.

போட்டியின் ஆட்டநாயகன் விருதினை விராட் கோலி பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 3ஆவதும், இறுதியுமான ரி-20 போட்டி ஞாயிற்றுக்கிழமை 22ஆம் திகதி பெங்களுரில் நடைபெறவுள்ளது.

Fri, 09/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை