தெற்கில் கடும் மழை

பல பகுதிகளில் வெள்ளம் மண்சரிவு; பெண் பலி

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்து சில தினங்களுக்கு நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய நாட்டின் தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் இன்றும் 200 மில்லிமீற்றரிலும் அதிக மழை பெய்யுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று பெய்த அடைமழையினால் காலி வந்துரம்ப பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் 42 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார். முப்படையினரும் பொலிஸாரும் குறித்த வீட்டிலிருந்து அவரது மூன்று பிள்ளைகளையும்

பாதுகாப்பாக மீட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பணிப்பாளரும் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து அதிக மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மண்சரிவு இடம்பெறக்கூடுமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஐந்து மாவட்டங்களுக்கு நேற்றையதினம் எச்சரிக்கை விடுத்தது. அதனடிப்படையில் களுத்துறை, கேகாலை, காலி, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்த அடை மழையால் களனி கங்கை, களு கங்கை மற்றும் அத்தகலு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டங்களும் அதிகரித்துள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.

கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் காலி மாவட்டத்திலேயே ஆகக்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஹிக்கடுவை பிரதேசத்தில் ஆகக்கூடியதான 124.5 மில்லிமீற்றர் மழையும் அதற்கு அடுத்தபடியாக வந்துரம்ப பிரதேசத்தில் 124 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளது.

அ​தேபோன்று காலி மாவட்டத்தின் ஹேகொட பகுதியில் 117 மில்லிமீற்றர் மழையும் யக்கலமுல்ல பிரதேசத்தில் 108.5 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளது. கொழும்பில் ஹன்வெல்ல பிரதேசத்தில் 97.5 மில்லிமீற்றர் மழையும் களுத்துறையில் மத்துகம பிரதேசத்தில் 92 மில்லிமீற்றர் மழையும் ஹொரனையில் 88.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

தெற்கில் பெய்து வரும் அடை மழைக்காரணமாக காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளன.

இக்காலப்பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் கடலில் கடும் காற்று வீசுவதனால் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் கடலுக்குச் செல்லும்போது அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை வட,வடமேல்,ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாமென்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அடை மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடுங் காற்று வீசும் அதேநேரம் மின்னல் தாக்கம் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்ெகாள்ளப்பட்டுள்ளனர்.

களுத்துறையில் அகலவத்தை, புலத்சிங்கள,தொடங்கொட, இங்கிரிய, மத்துகம,பாளிந்தநுவர மற்றும் வளலாவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கேகாலையில் எட்டியாந்தொட்டை, வரக்காபொல மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் காலியில் எல்பிட்டிய, இமாதுவ, நாகொட, நெ ளுவ, நியக்ம மற்றும் தவலம ஆகிய பகுதிகளிலும் இரத்தினபுரியில் கிரியெல்ல,கலவானை,அயகம,குருவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நுவரெலியாவில் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிலும் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

அடை மழைகாரணமாக இடம்பெறக்கூடிய அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக முப்படையினரும் பொலிஸாரும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகளும் உஷார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த பணிப்பாளர் கொடிப்பிலி உடனடி தேவைகளுக்கு 117 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்ெகாண்டார்.

லக்ஷ்மி பரசுராமன்

Tue, 09/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை