பிரதி அமைச்சர் தெவரப்பெரும உட்பட ஐவர் கைது; விளக்கமறியல்

தோட்டத்தொழிலாளியின் சடலத்தை தகனம் செய்ததாக குற்றச்சாட்டு

தோட்ட கண்காணி ஒருவரின் சடலத்தை அத்துமீறி தோட்ட மயானத்தில் தகனம் செய்தமைக்காக பிரதி அமைச்சர் பாலித்த தேவாரப்பெரும உட்பட ஐவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மத்துகமை நீதிமன்ற நீதிவான் ஹேமமாலி ஹால்பன்தெனிய உத்தரவிட்டுள்ளார்.

மத்துகம பிரதேச தோட்டம் ஒன்றில் கண்காணியாக பணியாற்றிய 70 வயதான ஒருவர் கடந்த 21 ஆம் திகதி தொடம்கொடை தெபுவ நோர்வூட் தோட்ட குடியிருப்பில் உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த வயோதிபரின் சடலத்தை அந்த தோட்ட மயானத்தில் தகனம் செய்ய தோட்ட உரிமையாளர் அனுமதி அளிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் தோட்ட உரிமையாளர் தெபுவன பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தெபுவன பொலிஸார் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து தடையுத்தரவை பெற்றது.

சடலத்தை புதைக்க முடியாத இக்கட்டான நிலையில் உயிரிழந்த நபரின் உறவினர்கள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெருமவை தொடர்பு கொண்டு தங்களது நிலைமையை தெளிவுபடுத்தினர். அதனையடுத்து உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்ட பிரதியமைச்சர் குறித்த இடத்திற்கு வந்து உயிரிழந்த சடலத்தை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தார். அவரே இறுதிக் கிரியைகளையும் நடத்திச் வைத்தார். இதையடுத்து பொலிஸார் மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதி மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான பிரதி அமைச்சர் பாலித்த தேவாரப்பெரும உட்பட்ட ஐவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மத்துகமை நீதிமன்ற பிரதான நீதிவான் ஹேமமாலி ஹால்பன்தெனிய உத்தரவிட்டுள்ளார். (பா)

 

களுத்துறை சுழற்சி நிருபர்

Wed, 09/11/2019 - 06:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை