அப்துல் றஹீம் அசீம் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு

விசேட தேவையுடை மாணவர்களுக்கிடையிலான கிழக்கு மாகாண மட்டப்பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற மாகாண மட்ட விளையாட்டுப்போட்டியில் மூதூர் கல்வி வலயத்திலுள்ள மூதூர் ஆலிம் சேனை வித்தியாலய மாணவன் அப்துல் றஹீம் அசீம் இரண்டு போட்டி நிகழ்ச்சிகளில் மாகாண மட்டப்போட்டிகளில் முதலாம் இடங்களைப்பெற்று சாதனைகளை நிலை நாட்டி தேசிய மட்டப்போட்டிக்குத்தெரிவாகியுள்ளார்.

விசேட கல்விப்பிரிவில் தரம் 5 இல் கல்வி பயிலும் அசீம் 05 ஆந் திகதி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற விசேட தேவையுடைய மாணவர்களிடையே ஆண்கள் பிரிவில் நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி முதலாமிடத்தை பெற்றே இச் சாதனைகளை புரிந்துள்ளார்

தலைக்கு மேல் பந்து எறிதல் மற்றும் 30 மீற்றர் தூரம் சக்கர நாற்காலி ஓட்டம் ஆகிய இரு போட்டி நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டு மாகாண மட்டத்தில் இரண்டு நிகழ்ச்சிகளிலும் முதலாம் இடத்தை பெற்று சாதனைகளை நிலை நாட்டி தேசிய மட்டப்போட்டிக்குத்தெரிவாகி பாடசாலைக்கும் ஊருக்கும் மூதூர் வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். வெற்றிபெற்ற மூதூர் வலயத்திலுள்ள பாடசாலை மாணவர்களை மூதூர் வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசீம் பாராட்டியுள்ளார்.

இம் மாணவனது சாதனைக்குப்பெரிதும் உதவிய ஆசிரியர் எம்.றம்சான், வழிகாட்டிய அதிபர் எம்.ஐ.எம்.வாஜீத், பிரதி அதிபர் எம்.றஹீம் ஆகியோர்கள் பாராட்டத்தக்க முக்கியமானவர்களாவர்.

வறிய குடும்பமொன்றில் பிறந்த இம் மாணவன் இரண்டு கால்களும் ஊனற்ற நிலையில் சிறுவயதிலேயே தனது தாயை இழந்து மூதூரிலுள்ள சுனாமித்திட்ட வீடொன்றில் தனது பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்துவருகின்றார்.

இம் மாணவன் விளையாட்டிலும் கல்வியிலும் சிறந்து விளங்குவதாகவும் தொழில் நுட்ப துறைகளிலும் அதிக ஆர்வமுள்ள மாணவனென பாடசாலை அதிபர் எம்.ஐ.ஏ.வாஜித் இவர் பற்றிக் குறிப்பிட்டார்.

ஏழைக்குடும்பத்திலுள்ள இம் மாணவனின் கல்விக்கும் எதிர்கால வளர்சிக்கு உதவ அனைவரும் முன்வருவது இம் மாணவனுக்குப் பேருதவியாக அமையும்.

தோப்பூர் தினகரன் நிருபர் )

Wed, 09/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை