அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது ஆஷஸ் டெஸ்ட்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் கடந்த 4-ம் திகதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே அவுஸ்திரேலியா 497 ஓட்டங்களும், இங்கிலாந்து 301 ஓட்டங்களும் குவித்தன. அடுத்து 196 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 186 ஓட்டங்கள் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 383 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே ரோரி பர்ன்ஸ் (0), அணியின் தலைவர் ஜோ ரூட் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை தாரைவார்த்து திண்டாடியது. 4-வது நாள் முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 18 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. ‘டிரா’ செய்யும் நோக்குடன் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள், அவுஸ்திரேலியாவின் துல்லியமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். ஜோசன் ராய் (31 ஓட்டங்கள்), சகல துறை வீரர் பென் ஸ்டோக்ஸ் (1ஓட்டம்) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் காலி செய்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜோ டென்லி (53 ஓட்டங்கள்), விக்கெட் காப்பாளர் பேர்ஸ்டோ (25 ஓட்டம்) சீரான இடைவெளியில் நடையைக் கட்டினர்.

6 விக்கெட்டுக்கு 136 ஓட்டங்களுடன் பரித்தவித்த நிலையில் 7-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஜோஸ் பட்லரும், கிரேக் ஓவர்டானும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்தனர். ஆனால் தேனீர் இடைவேளைக்கு பிறகு இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் பிரித்தார். அவரது பந்து வீச்சில் பட்லர் (34 ஓட்டங்கள், 111 பந்து, 4 பவுண்டரி) கிளின் போல்ட் ஆனார். அடுத்து வந்த ஜோப்ரா ஆர்ச்சர் (1 ஓட்டம்) நிலைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து 9-வது விக்கெட்டுக்கு இணைந்த ஓவர்டானும், ஜாக் லீச்சும் 14 ஓவர்கள் வரை ஈடுகொடுத்து விளையாடியதால், அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் பதற்றமடைந்தனர். இந்த சூழலில் ஜாக் லீச் (12 ஓட்டங்கள், 51 பந்து) நதன் லயனின் சுழலில் அருகில் நின்ற மேத்யூ வேட்டிடம் பிடி ஆனார்.

பின்னர் நீண்ட நேரம் போராடிய ஓவர்டானின் (21 ஓட்டங்கள், 105 பந்து) சவாலுக்கு ஹேசில்வுட் எல்.பி.டபிள்யூ. ஆகும் வகையில் ‘செக்’ வைத்தார். முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 91.3 ஓவர்களில் 197 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது. இதனால் அவுஸ்திரேலிய அணி 185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கொண்டு 14 ஓவர்கள் சமாளித்து இருந்தால் இங்கிலாந்து போட்டியை ‘டிரா’ செய்திருக்கும்.

அவுஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட், நதன் லயன் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். இரட்டை சதம் விளாசிய அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அத்துடன் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி எதிர்வரும் 12-ம் திகதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது.

இந்த வெற்றிக்காக அவுஸ்திரேலிய அணிக்கு உலக சம்பியன்ஷிப் கணக்கீட்டில் 24 புள்ளிகள் வழங்கப்பட்டது.

Tue, 09/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை