ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி எவராலும் ஜனாதிபதியாக முடியாது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி எந்தக் கட்சியில் எவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றி பெறமுடியாதென, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் முன்னாள் செயலாளரும், அனுராதபுரம் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

கல்நேவ பிரதேசத்திலுள்ள சங்கங்கள் மற்றும் மரண நலன்புரிச் சங்கங்களுக்கு பிளாஸ்ரிக் கதிரைகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வுகள் அண்மையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஒருவர் ஏனைய வேட்பாளர்களை விட ஒரு வாக்கை அதிகமாகப் பெற்றாலும் வெற்றி பெற முடியும்.

ஜனாதிபதித் தேர்தல் அவ்வாறல்ல. நாடு முழுவதும் அளிக்கப்பட்ட வாக்குகளை வைத்தே வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பதினைந்து இலட்சம் வாக்குகள் இருந்தால், அதுவே தீர்மானிக்கும் சக்தியாக அமையும். நாட்டிற்குப் பொருத்தமான பொருளாதாரத்தை வளப்படுத்தி நாட்டை சுபீட்சப் பாதையில் வழிநடத்தக்கூடிய ஒருவரையே ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும்.

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஒன்று கூடி சிறந்த ஒரு தீர்மானத்தை எடுப்போம். கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் கருத்துக்களை அறிந்தே நாம் முடிவுகளை எடுப்போம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ 52 நாள் அரசில் பிரதமராக நியமிக்கப்பட்ட போதும் நாங்கள் கட்சியை விட்டுக் கொடுக்கவில்லை.

எமது சுய கெளரவங்களை விட்டுக்கொடுக்க நாம் தயாரில்லை. பதவி, பணம், பட்டங்களுக்கு சோரம் போகின்றவர்கள் நாமில்லை.

சில நிபந்தனைகளின் பேரிலே நாம் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிப்போம். நாம் யாருக்கு ஆதரவு வழங்கினாலும் அவரே அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். எமது கட்சியின் வாக்குகள் இல்லாமல் எந்தவொரு வேட்பாளரும் ஜனாதிபதியாக வர முடியாது. நாம்தான் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் சக்தியாகத் திகழ்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கல்நேவ தினகரன் விசேட நிருபர்

Mon, 09/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை