கோட்டாபயவின் மேன்முறையீடு நேற்று நிராகரிப்பு

ஐவர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் மனுவை ஏற்க மறுப்பு

டீ.ஏ ராஜபக்ஷ நூதனசாலை மற்றும் நினைவுத்தூபி தொடர்பான வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள விதம் தவறானதென சுட்டிக்காட்டி அதனை நிராகரிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட இரண்டு மேன்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

ஐந்து நீதிபதிகளடங்கிய குழுவினரால் நேற்று இம்மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பெரும்பான்மை நீதிபதிகள் இம்மனுவை நிராகரித்தனர்.

மெதமுலனையில் டீ.ஏ ராஜபக்ஷ நினைவுத்தூபி மற்றும் நூதனசாலை அமைக்கும்போது காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுதாபனத்திற்குச் சொந்தமான 33.9 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும் இவ்வழக்கு தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள விதம் தவறானதென சுட்டிக்காட்டி அதனை நிராகரிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு மனுவொன்றை முன்வைத்திருந்தார்.

இம்மனுவை சிசிர த ஆப்ரு, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டீ.பி தெஹிதெனிய ஆகிய ஐந்து நீதிபதிகளடங்கிய குழுவினர் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டனர்.

இம்மனுவை ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவின் பெரும்பான்மை இணக்கத்துடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிப்பதாக நீதிபதிகள் குழாமின் தலைவர் சிசிர த ஆப்ரு நீதிமன்றத்துக்கு தெரிவித்தார்.

மேலும் இம்மனுவை விசாரணைக்கு எடுப்பதற்கு போதுமான சட்டக் காரணிகள் இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த அரசாங்கத்தில் மெதமுலனையில் டி.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த நூதனசாலை நிர்மாணிப்பதற்காக காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 33.9 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டிருப்பதாகக்கூறி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மாஅதிபர் பொது வழங்கல் சட்டத்தின் கீழ் ஏழு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கில் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்னவும் பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றியும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் பிரசாத் ஹர்சன டி சில்வா, முன்னாள் பொது முகாமையாளர் பத்ரா உதுலாவத்தி கமலதாச மற்றும் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான சுதம்மிக்கா கெமிந்த ஆர்டிகல,சமன் குமார ஆப்ரஹாம் கலபத்தி,தேவகே மஹிந்த சாலிய மற்றும் சிறிமதி மல்லிகா குமாரி சேனாதீர ஆகியோரே கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான பணத்தை மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Thu, 09/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை