முன்னாள் பணிப்பாளர்களை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சுங்கத் திணைக்களத்தில் 8 கிலோ தங்கம் முறைகேடு

அரசுடமையாக்குவதற்காக சுங்கத் திணைக்களத்தில் வைக்கப்பட்டிருந்த 8 கிலோ தங்கத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கமைய சந்தகிரி பௌத்த விஹாரையில் அமைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு பிரதிஷ்டை செய்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் மற்றும் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஆகியோரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளரின் ஆலோசனைக்கமைய அநுராதபுரம் சந்தகிரி விஹாரையில் பிரதிஷ்டை செய்வதற்கு 8 கிலோ எடையுள்ள தங்க புத்தர் சிலைக்கு சுங்கத்திலுள்ள தங்கத்தை வழங்கியது பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

பொதுச் சொத்தை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பில் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதாக நிதி மோசடி பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

இந் நிலையிலே இரு சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கு நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டார். இச் சம்பவத்துடன் தொடர்புள்ள இரு சந்தேகநபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்த நிதி மோசடி பிரிவு, இது தொடர்பில் அறிக்கையொன்றையும் சமர்ப்பித்தது. இரு குழுக்கள் சந்தேக நபர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்தனர்.

சந்தேக நபர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பிருப்பதால் அதற்கு தடை உத்தரவு வழங்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தை கோரினர். இதன் பிரகாரம் அவர்களுக்கு வெளிநாட்டு பயணங்கள் தடை செய்யப்பட்டன.இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

வடக்கு கடலில் கைது செய்யப்பட்டு அரசுடமையாக்குவதற்காக சுங்கத்திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்ட 45.3 கிலோ தங்கத்தில் 8 கிலோ தங்கத்தை சுங்க கட்டளைச் சட்டத்திற்கு முரணாக வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

இந்த மோசடி தொடர்பில் விசாரணை நடத்தி ஒக்டோபர் 8 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் கட்டளையிட்டார்.(பா)

Fri, 09/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை