தெரிவுக்குழுவின் கோரிக்கைக்கு அமையவே ஊடகங்கள் வரவில்லை

தெரிவுக்குழுவின் கோரிக்கைக்கு அமையவே ஊடகங்கள் வரவில்லை-Media excluded between me and the Parliamentary Select Committee is False claim

ஜனாதிபதிக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு பிரதிநிதிகளுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தனது தேவைக்காக ஊடகங்களுக்கு வெளிப்படுத்தவில்லை என்பது பொய் குற்றச்சாட்டாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (20) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு, ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற்றிருந்தது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வு தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அந்த கலந்துரையாடலை ஆரம்பம் முதல் இறுதி வரை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதற்கு தான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்ததாகவும் அதனை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம் என பாராளுமன்ற தெரிவுக்குழுவே கோரிக்கை முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தெரிவுக்குழு தன்னிடம் கோரிக்கை முன்வைத்ததாகவும் தனது விருப்பத்தின்படி செயற்படலாம் என சட்ட மா அதிபர் தெரிவித்திருந்த போதிலும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையில் தான் அந்த குழுவின் கோரிக்கையை ஏற்றதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, தன்னிடம் மூடி மறைப்பதற்கு எந்தவொரு காரணமும் இல்லாமையினால் அனைத்து விடயங்களையும் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு தான் தெரிவித்தாகவும் குறிப்பிட்டார்.

நேற்று (21) பிற்பகல், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நாடளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கும் மாவட்ட மாநாட்டுத் தொடரின் மாத்தளை மாவட்ட மாநாடு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாவுலவில் இடம்பெற்றது இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Sun, 09/22/2019 - 13:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை