செஹான், மெண்டிஸ் இன்றைய போட்டியில் இல்லை

இலங்கை கிரிக்கெட்

இலங்கை -- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது 20க்கு20 போட்டியில் உபாதைக்குள்ளாகிய குசல் மெண்டிஸ் மற்றும் செஹான் ஜயசூரிய ஆகியோர் இன்றைய 3 ஆவது 20க்கு 20 போட்டியில் விளையாட மாட்டார்கள் என இலங்கை கிரிக்கெட் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கண்டி – பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது 20க்கு20 போட்டியின், இறுதி ஓவரில் களத்தடுப்பில் ஈடுபட்ட போது, குசல் மெண்டிஸ் மற்றும் செஹான் ஜயசூரிய ஆகியோர் மோதிக்கொண்டதில், இருவரும் உபாதைக்கு முகங்கொடுத்தனர்.

வனிந்து ஹசரங்க வீசிய இறுதி ஓவரில் நியூசிலாந்து அணிக்கு 7 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்தது. முதல் இரண்டு பந்துகளுக்கும் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது பந்தை சென்ட்னர் அடிக்க, குறித்த பந்து பிடியெடுப்பாக பௌண்டரி எல்லை அருகில் உயர்ந்து சென்றது.

குறித்த பந்தை குசல் மெண்டிஸ் மற்றும் செஹான் ஜயசூரிய ஆகியோர் பிடியெடுக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில், செஹான் ஜயசூரிய பந்தை பிடியெடுத்தார். எனினும், இவர்கள் இருவரும் கடுமையாக மோதி மைதானத்தில் விழுந்தனர். இதில், செஹான் ஜயசூரிய பந்துடன் பௌண்டரி எல்லையை தொட்டதால், நியூசிலாந்து அணிக்கு 6 ஓட்டங்கள் வழங்கப்பட்டது.

எனினும், கடுமையான உபாதைக்கு முகங்கொடுத்த இருவரும், மைதானத்திலிருந்து நீண்ட நேரத்தின் பின்னர் வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில், தற்போது அவர்களின் உபாதைகள் தொடர்பில் அறிவித்தலை வெளியிட்டுள்ள கிரிக்கெட் இன்றைய போட்டியில் இவர்கள் விளையாட மாட்டார்கள் என்பதை உறுதிசெய்துள்ளது.

குசல் மெண்டிஸின் வலது முழங்கால் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதாகவும், செஹான் ஜயசூரியவின் வலது முழங்காலின் மேற்பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதாகவும் கிரிக்கெட் சுட்டிக்காட்டியுள்ளது. இதில், குசல் மெண்டிஸின் உபாதைக்கான எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேன் பரிசோதனை நேற்று இடம்பெற்றுள்ளதாகவும், அதற்கான அறிக்கைகள் கிடைக்கப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உபாதைக்குள்ளாகிய இரண்டு வீரர்களுக்கான மாற்று வீரர்கள் எவரும் இணைக்கப்படவில்லை என தேர்வுக்குழு தலைவர் அசந்த டி மெல் குறிப்பிட்டுள்ளதுடன், அணியில் உள்ள வீரர்கள் அடுத்தப் போட்டியில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் அடிப்படையில், அணியில் உள்ள ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்க மற்றும் வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரர் லஹிரு மதுசங்க ஆகியோர் மூன்றாவது போட்டியில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது 20க்கு 20 போட்டி இன்று 6ம் திகதி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 09/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை