எத்தனை கட்சி வந்தாலும் எந்தளவு நன்மை என்பதை மக்கள் அறிய வேண்டும்

புதிதாக எத்தனை அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றாலும் அக்கட்சிகளின் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டம் எந்தளவிற்கு மக்களுக்கு நன்மை பகர்க்கும் என்பதை பொதுமக்கள் கருத்திற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒரு வலுவான அரசியல் கட்சி என்றும் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிடுவதை விட அரசியல் கட்சியின் தரத்தை கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் சக்தியினூடாகவே ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்ய முடியும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அனைவரையும் அரவணைத்து நாடு தொடர்பில் சிந்திக்கும் தேசிய வேலைத்திட்டமொன்றினை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்னெடுக்கும் என்றும் அதன் ஆற்றலை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்றும் புதிதாக தோன்றியுள்ள அரசியல் கட்சிகளை விட வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது ஊழல், இலஞ்சம், சந்தர்ப்பவாதம், குடும்ப அரசியல் போன்ற எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாத கட்சி என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (21) பிற்பகல் நாவுலவில் இடம்பெற்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நாடளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கும் மாவட்ட மாநாட்டுத் தொடரின் மாத்தளை மாவட்ட மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

பெருந்திரளான கட்சி உறு்பபினர்களின் பங்குபற்றுதலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான லசந்த அலகியவன்ன, திலங்க சுமதிபால, சாந்த பண்டார, மாத்தளை மாவட்ட அமைப்பாளர் லக்ஷ்மன் வசந்த பெரேரா ஆகியோர் உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த மாநாடு இன்றைய தினம் ஜனாதிபதியின் தலைமையில் மாத்தறை மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.

Sun, 09/22/2019 - 16:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை