போதைகளிலிருந்து இளைஞர்களை திசை திருப்ப விளையாட்டுக்கள் உதவும்

இளைஞர்கள் அதிகமாக விளையாட்டுக்களில் ஈடுபடுவார்களானால் போதைப்பொருள் பாவனையிலிருந்து அவர்களை மீட்கலாமென ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரகுமான் தெரிவித்தார்.

விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் .

நகர சபை உறுப்பினர் தமரா தயானி சந்தியாகோ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து பேசிய முஜிபூர் ரகுமான் கூறியதாவது:

கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோஸி சேனநாயக்கவின் வழிகாட்டலில் நகரிலுள்ள விளையாட்டு மைதானங்கள் மற்றும் சனசமூக நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படும்.

கொழும்பு நகரின் ஐந்து தேர்தல் பிரிவுகளில் மத்திய கொழும்பு தேர்தல் பிரிவுக்கு உட்பட்ட ஒருகொடவத்த பிரதேச 19 வது ஒழுங்கை இது வரை அபிவிருத்தி செய்யப்படவில்லை.

அப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய நகர சபை உறுப்பினரான ஆரியரத்ன சந்தியாகோ முன்வந்துள்ளார். இவரின் யோசனைகள் மற்றும் வேண்டுகோளுக்கிணங்க 1979ம் ஆண்டு தொடக்கம் 1989ம் ஆண்டுவரை முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச, மற்றும் மேயராக இருந்த சிறிசேன குரே அகியோர் பல அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஒருகொடவத்த, நவகம்புர பிரதேசங்களில் மிகவும் வறியவர்களே வாழ்கின்றனர். அவர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வியை வழங்கி அவர்களை விளையாட்டுத்துறையிலும் ஊக்குவிக்க வேண்டும். இப்பிள்ளைகளின் திறமைகளை வளர்க்க நாம் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு இணை அமைப்பாளரும் கொழும்பு மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பைரூஸ் ஹாஜியார் விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்குவதன் மூலம் இளைஞர் யுவதிகளின் உடல் மன நிலையை ஆரோக்கியமாகப் பேணலாம் எனத் தெரிவித்தார்.

 

மத்திய கொழும்பு குறூப் நிருபர்

Tue, 09/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை