சவூதி துருப்புகள் சிக்கியதாக யெமன் ஹூத்திக்கள் அறிவிப்பு

சவூதி அரேபியா மற்றும் யெமன் எல்லையில் பாரிய தாக்குதல் ஒன்றை நடத்திய யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் பெரும் எண்ணிக்கையிலான சவூதி துருப்புகளை பிடித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.  

சவூதி நகரான நஜ்ரானுக்கு அருகில் மூன்று சவூதி படையணிகள் சரணடைந்ததாக ஹூத்தி பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதில் ஆயிரக்கணக்கான படையினர் பிடிபட்டதாகவும் மேலும் பலர் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இந்த கூற்றை சவூதி அதிகாரிகள் உறுதி செய்யவில்லை.  

யெமன் யுத்தம் ஆரம்பித்தது தொடக்கம் இடம்பெற்ற மிகப் பெரிய தாக்குதலாக இது இருந்ததாக ஹூத்திக்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது சவூதிப் படை பெரும் உயிர் மற்றும் பொருட்சேதத்தை சந்தித்ததாகவும் அது கூறியது.  

பிடிபட்ட சவூதி படையினர் வரிசையாக அழைத்துச் செல்லும் காட்சி ஹூத்திக்களின் அல் மசிரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.  

யெமனின் வடக்கு பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூத்திக்கள் அண்மைக்காலமாக சவூதி மீதான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலமான தாக்குதல்களை அதிகரித்துள்ளது.  

சவூதியின் அரச எண்ணெய் நிறுவனமான அரம்கோவின் இரு எண்ணெய் நிலைகள் மீது கடந்த செப்டெம்பர் 14 ஆம் திகதி நடத்திய தாக்குதல்களுக்கும் இந்த கிளர்ச்சியாளர்களே பொறுப்பேற்றனர்.  

இந்த தாக்குதலானது உலக எண்ணெய் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

ஆனால், இந்த தாக்குதலை ஈரான் தான் மேற்கொண்டதாக சவூதி, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் குற்றஞ்சாட்டின. 

யெமனில் 2015ஆம் ஆண்டு அந்நாட்டு ஜனாதிபதி மன்சூர் ஹதி மற்றும் அவரது அமைச்சரவை யெமன் தலைநகரைவிட்டு வெளியேற்றப்பட்டது. இவர்களை வெளியேற்றியவர்கள் ஹூத்தி கிளர்ச்சியாளர்களாவர். 

சவூதி, ஹதியை ஆதரிக்கிறது. ஈரான் ஹூத்தி கிளர்ச்சியாளர்களை ஆதரிக்கிறது. சவூதி தலைமையிலான படை தினமும் யெமன் மீது வான் தாக்குதல் தொடுக்கிறது. 

இந்தப் பிரச்சினையின் காரணமாக 2016ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 70,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா கூறுகிறது.     

Mon, 09/30/2019 - 14:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை